கூட்டமைப்பில் இருந்தோர் மீள சேர்ந்தியங்க வேண்டிய நேரம்! – வந்து விட்டது என்கின்றார் சுமந்திரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள் சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் வந்துள்ளது. கூட்டமைப்பில் இருந்தவர்கள் எங்களுக்கு (இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு) ஆதரவளிக்கும்போது பெரும்பாலான இடங்களில் நிர்வாகத்தை அமைக்கக் கூடியதாக இருக்கும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் மக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய வெற்றியை மிகவும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கின்றோம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கில் 58 சபைகளில் போட்டியிட்டது. இந்த 58 சபைகளில் 10 இற்கும் மேற்பட்ட சபைகள் தமிழர்களுக்குப் பெரும்பான்மை இல்லாத சபைகளாகக் காணப்படுகின்றன. குறைந்தது 40 சபைகளில் நாங்கள் நிர்வாகங்களை அமைப்பதற்கு ஏற்ற வகையில் முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து ஆறு மாத காலங்களுக்குள் தமிழ் மக்கள் மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மீது நம்பிக்கையை வைத்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகப் பிரதிபலிக்கப்பட்டிருக்கின்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தவறான விம்பம் ஒன்று ஏற்பட்டது. 25 சதவீதமான வாக்கைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் உள்ள ஆறு ஆசனங்களில் 3 ஆசனங்கள் கிடைத்திருந்தன. 25 சதவீதமான வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு 50 சதவீதமான ஆசனங்கள் கிடைத்திருந்தன. அதனை வைத்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய ஆணை தங்களுக்கு வந்துவிட்டது என அவர்கள் கூறித்திரிந்தார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பில் பெரு வெற்றி பெற்றிருந்தது. அதுபோல் உள்ளூராட்சித் தேர்தலிலும் பெரு வெற்றிபெற்றிருக்கின்றது. வடக்கில் வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பெரு வெற்றியைப் பெற்றிருக்கின்றோம். வவுனியா மாவட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டதற்கான காரணங்களை அறிந்து உடனடியாக அதனை நிவர்த்தி செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்போம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததாகச் சொன்னார்கள். ஆனால், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் ஒரு மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது. இதற்குக் காரணம், தமிழ் மக்களினுடைய அடையாளம் எந்தக் காலத்திலும் விட்டுக்கொடுக்க முடியாதது என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிற்பாடு மக்களினுடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அது இந்தத் தேர்தலில் வெளிவந்திருக்கின்றது.
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கின்றபோது ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் பேசி முடிவுகளை எடுப்போம். உள்ளூராட்சி மன்றங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையான சேவைகளை மேற்கொள்ளுவோம். எங்கள் கட்சிகளிலிருந்து தெரிவாகிய உறுப்பினர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி அனைத்து சபைகளிலும் திறமையான நிர்வாகங்களை மேற்கொள்வோம்.
கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் போட்டியிட்டதைவிட இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனியாகப் போட்டியிட்டு பெற்ற முடிவுகள் பெறுமதியானவை. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமையில் ஒரு கட்சியாகப் போட்டியிடுவதைத் தவிர்த்து ஒன்றாக இருக்கும் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டுப் பின் ஒன்றாகச் சேர்ந்து நிர்வாகங்களை அமைப்பது சிறந்தது என்பது இப்போது பலருக்குப் புரியும்.
ஆகவே கட்சியை உடைத்து விட்டோம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து விட்டோம் எனச் சொல்பவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியும் பலவீனமடையவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் சேர்ந்திருந்ததை விட தனியாகப் போட்டியிட்டுப் பலமான கட்சியாக மாறியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள் தற்போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக இயங்குகின்றார்கள். அவர்கள் எங்களுக்கு ஆதரவளிக்கும்போது பெரும்பாலான இடங்களில் நிர்வாகத்தை அமைக்கக் கூடியதாக இருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிட்டது என்ற செய்தியை ஆரம்பத்தில் இருந்தே மறுத்திருக்கின்றேன். ஏனெனில் கடந்த நாடாளுமன்றக் காலம் முடிவடையும் வரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே நாடாளுமன்றக் குழு இயங்கி வந்தது. ஆனால், தேர்தல் வந்தபோது தனித்துப் போட்டியிட்டார்கள். உண்மையில் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தவறானது. உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே தனித்துப் போட்டியிடுவது பயனுள்ளதாக அமையும் என்பது இந்தத் தேர்தலில் நிரூபணமாகியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள் சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் வந்துள்ளது. குறிப்பாக எங்களுடைய பிரதேசத்தில் ஆறாயிரம் ஏக்கர் காணிகள் பறிபோகின்ற சூழல் உருவாகியுள்ளது. நான் இது தொடர்பில் முன்னரும் குறிப்பிட்டிருந்தேன். மக்களின் ஆணையோடு ஜனாதிபதிக்கும், அரசுக்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். மக்களின் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீளக் கைவாங்குமாறு கோருகின்றேன். மே மாதம் 28ஆம் திகதி வரை அரசுக்குக் காலக்கெடு கொடுத்திருக்கின்றேன்.
மே 28ஆம் திகதிக்கு முன்னர் அரசு குறித்த வர்த்தமானியை மீளப்பெறாது விட்டால் இதற்கு எதிரான பாரிய போராட்டம் ஒன்றை நிகழ்த்துவோம். இந்நிலையில் ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் ஒரு அறிவிப்பை விடுக்கவுள்ளேன். வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக இணைந்து செயற்பட வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத்திலேயே மாகாண சபைகள் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது சில காரணங்களால் நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால், தற்போதய நாடாளுமன்றத்தில் மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முயற்சித்தபோது, அதனை அரசே கொண்டுவரும் என்ற வாக்குறுதியை ஜனாதிபதி அநுர வழங்கியிருந்தார். எனினும், ஆறு மாதங்கள் தாண்டிய போதும் அதில் எதுவித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்னர் நான் கொண்டுவந்த அதே தனிநபர் சட்டமூலத்தைத் தனது தனிநபர் சட்டமூலமாகக் கொண்டு வருவதற்கான அறிவித்தலை நாடாளுமன்றத்திடம் கொடுத்திருக்கின்றார். எனவே, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அந்தச் சட்டமூலம் கொண்டுவரப்படும். அந்தத் திருத்தத்தை மேற்கொண்டால் உடனடியாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும். மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோளாக உள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே அதிகளவான ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. ஆகையினால் மாநகர மேயர் பதவி இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே உரித்தானது. ஏனைய கட்சிகள் அதனை அனுசரித்து எமக்கான ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். மாநகர மேயர் யார் என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை.
சாவகச்சேரி நகர சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சிகள் இரண்டுக்கும் சமனான ஆசனங்கள் கிடைத்திருக்கும் நிலையில் ஏனைய கட்சிகளே யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியினர் கணிசமான ஆசனங்களைப் பெற்றிருக்கின்றார்கள். அது தொடர்பிலும் நாம் ஆராய வேண்டும். தேசிய மக்கள் சக்தியினரால் சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதாகவும், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அது தொடர்பிலும் ஆராய்வோம்.
தேர்தல் காலங்களில் இடம்பெற்ற விதிமுறை மீறல்களுக்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் பலமான அழுத்தத்தைக் கொடுப்போம். விதிமுறை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மேல் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தேயாக வேண்டும். அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இந்த ஆணைக்குழு
சுயாதீனமானதா? இல்லையா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.” – என்றார்.