எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் பெரும்பாலான சபைகளை வெற்றி பெற்றிருக்கலாம் – தன் அறிவுரைகளை அந்தக் கட்சிகள் கேட்கவில்லை என்று ரணில் ஆதங்கம்.

நான் சொன்ன ஆலோசனையின் பிரகாரம் செய்திருந்தால் எதிர்க்கட்சிகள் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ரணில் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் தெரிவித்த ஆலோசனையின் பிரகாரம் ஐம்பது முதல் நூறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் கணிசமான எண்ணிக்கையிலான சபைகளை வெற்றி பெறுவதற்கு இடம் இருந்தது. குறிப்பாக கொழும்பில் மாத்திரம் இவ்வாறானதொன்றைச் செய்திருக்கலாம். நான் தெரிவித்தது போல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாததால் மக்கள் பிளவுபட்டு வாக்களித்துள்ளனர்.
ஐந்து வருடங்களுக்குப் பின்னர் நாங்கள் யானை சின்னத்தில் போட்டியிட்டோம். இதை ஒரு தொடக்கமாகக் கருதலாம். சில பகுதிகளில் எமது பெறுபேறுகள் திருப்தியாக உள்ளன. இப்போது ஐக்கிய தேசியக் கட்சி புதிதாகச் செயற்பட வேண்டியுள்ளது. இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி மக்களுக்கு சில வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
நான் தேர்தல் பிரசாரப் பணிகளில் பங்கேற்கவில்லை. இதைச் செயற்படுத்த இளம் தலைவர்களுக்குப் பொறுப்பு வழங்கினேன். இது ஒரு சோதனை. நல்ல இடங்கள் போன்று கெட்ட இடங்களும் உண்டு. இப்போது இருக்கும் பலத்துடன் எப்படி முன்னேறுவது என்று நாங்கள் சிந்திக்க வேண்டும்.
யானை சின்னத்தில் முன்வரும்போது மக்கள் வாக்களிக்க வருவார்கள் என சிலர் தெரிவித்தனர். யானை சின்னத்தில் முன்வந்ததால் மாத்திரம் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது தற்போது தெரிந்துகொள்ளலாம். இப்போது கட்சியின் புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தக் கட்சியை 40, 50 வயது நிரம்பியவர்களால் கட்டியெழுப்ப வேண்டும். இதற்குப் பிறகு இளைஞர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னுக்குச் செல்ல வேண்டும். ஐக்கிய மக்கள் சக்திக்கும் கடந்த முறை கிடைத்த வாக்குகள் இந்த முறை கிடைக்கவில்லை.” – என்றார்.