வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன? – நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி. கேள்வி.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 ஆயிரத்து 700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக 2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதை, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த சபைக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இன்றைய சபை அமர்வில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், நாடாளுமன்றக் குழுத் தலைவராக, துறைசார் அமைச்சரிடம் வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும்போதே அவர் இந்த விடயம் குறித்து சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ள காணிகள் என்ன தேவைக்காகக் கோரப்பட்டுள்ளன என்பதையும், 5700 ஏக்கர் வரையான காணிகளை அவசரமாகச் சுவீகரிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலம் நடைபெற்ற யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், உறவினர் – நண்பர்களின் வீடுகளிலும் வாழும்போது அவர்களது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காமல், மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தலின்; உள்நோக்கம் என்ன என்பதையும், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீண்டகால யுத்தம் காரணமாக அவர்களது காணி ஆவணங்கள் தவறவிடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கும் நிலையில், இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு எவ்வாறு கோர முடியும் என்பதையும் அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிக்க வேண்டும்.” – என்று வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், நாடாளுமன்றக் குழுத் தலைவர்களால் கேட்கப்படும் வாய்மொழி மூல வினாக்களுக்கு, துறைசார் அமைச்சர் உரிய காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.