தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து நல்லூர், காரைநகர் சபைகளில் ஆட்சி அமைக்க ‘மான்’ முயற்சி.

“நல்லூர் பிரதேச சபையிலும், காரைநகர் பிரதேச சபையிலும் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்கள் கூட்டணி ஆட்சி அமைக்கக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. அவ்வாறு ஆட்சி அமைத்தால் அந்தப் பிரதேச சபைகளைச் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்வோம்.”

இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடைபெற்று முடிந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மான் சின்னத்தில் போட்டியிட்ட நமக்கு மக்கள் பெரும் ஆதரவைத் தந்துள்ளார்கள். இனிவரும் தேர்தல்களில் நாம் புத்தெழுச்சியுடன் போட்டியிடுவோம்.

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தோம். அவற்றில் சில நிராகரிக்கப்பட்ட நிலையில் 7 சபைகளில் போட்டியிட்டோம்.

விதியோ சதியோ தெரியவில்லை எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையால், நாம் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அந்த முயற்சியும் தோல்வியடைந்தமையால் நாம் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக வெறும் 11 நாட்களே செலவு செய்தோம்.

குறுகிய கால பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும் சிறப்பான அடைவுகளைப் பெற்றுள்ளோம்.

நல்லூர் பிரதேச சபையில் 6 ஆசனங்களையும், காரைநகர் பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் பெற்றுள்ளோம். அங்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடிய நிலைமை காணப்பபடுகின்றது.

அவ்வாறு ஆட்சி அமைத்தால் அந்தப் பிரதேச சபைகளைச் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்வோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.