விலை போகாதவரே யாழ். மேயராக வரவேண்டும்! – முன்னாள் மேயர் மணி வலியுறுத்து.

“யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக வரக் கூடியவர் விலை போகாதவராகத் தமிழ்த் தேசியப் பற்றுடன் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் வலியுறுத்தினார் தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாநகர சபை மேயர் பதவி என்பது மிக முக்கியமானது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட முக்கியமானது. நாடாளுமன்ற உறுப்பினரை விட சிறப்பாகச் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் இராஜதந்திரிகள் யாழ். மேயரை நிச்சயம் சந்திப்பார்கள். அவ்வாறானவர்களுடன் இராஜதந்திர ரீதியாக உரையாட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள், தமிழ் மக்களின் அபிலாஷைகள், அவர்களின் பிரச்சினைகள் என்பவற்றை எடுத்துக் கூற வேண்டும்.

எனவே, மேயராக தமது கட்சி சார்பாக முன்னிலைப்படுத்தப்படுவர் சிறப்பானவராக இருக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொறுப்புடன் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றது போல் மேயரைத் தெரிவு செய்ய வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.