மாணவியின் உயிர்மாய்ப்பை அநுர அரசு அலட்சியப்படுத்துவதன் நோக்கம் என்ன? – நாடாளுமன்றில் நாமல் எம்.பி. கேள்வி.

“பாடசாலை மாணவியின் தற்கொலையுடன் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மத்திய அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இவரைப் பாதுகாப்பதற்கு அநுர அரசு இந்த விடயத்தை அலட்சியப்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. மாணவியின் உளவியல் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும்.?”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ‘அ’ அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“மக்களுக்குப் பல போலியான வாக்குறுதிகள் மற்றும் பொய்களைக் குறிப்பிட்டு ஆட்சியமைத்த அரசு இன்று திண்டாடுகின்றது. தேர்தல் காலத்தில் நாம் பொய்யுரைக்கவில்லை. இயலுமானதையே குறிப்பிட்டோம். சவால்களுக்கு மத்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். எமக்கு வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகள். அரசியலில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளோம்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் உளவியல் ரீதியான பாதிப்புக்களினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலை காணப்படுகின்றது.

அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டார். மக்கள் விடுதலை முன்னணிக்குப் பகிடிவதை தொடர்பில் புதிதாக எதையும் குறிப்பிடத் தேவையில்லை.

அவர்கள் பகிடிவதைகள் தொடர்பில் ஏனையவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். ஏனெனில், பல்கலைக்கழகங்களில் பகிடிவதையின் கர்த்தாக்கள் அவர்கள்தான். தமது அரசியல் தேவைக்காகப் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை வன்முறையாக மாற்றியமைத்தார்கள்.

கொழும்பில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விடயம் தற்போது பிரதான பேசுபொருளாகியுள்ளது. எமது சக உறுப்பினர் மனோ கணேசன் அந்த மாணவி தொடர்பில் இங்கு பேசினார். அதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பதிலளித்தார்.

இந்த மாணவியின் உளவியல் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவ்வாறு உளவியல் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க முடியும்? இதனை எம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்தச் சம்பவத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மத்திய அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இந்த விவகாரத்தில் அவரைப் பாதுகாப்பதற்காக அநுர அரசு கவனம் செலுத்தாது அலட்சியப்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. இதனை அரசியலாக்க வேண்டிய தேவை எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. உயிரிழந்த மாணவிக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து பேசுபொருளாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தாதீர்கள்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் கல்கிஸையில் 19 வயது இளைஞர் பகல் வேளையில் பிரதான வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், ‘இந்த இளைஞரின் தாயார் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றார். அதனால்தான் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது’ – என்று கூறினார்.

இவ்வாறு இப்படிக் கூற முடியும்? முறையான விசாரணைகள் நடந்ததன் பின்னரா இவ்வாறு அவர் குறிப்பிட்டார்? தாய் போதைப்பொருள் வியாபாரி என்றால் அந்த இளைஞர் ஏன் இளம் வயதில் வீதிகளைத் துப்பரவு செய்ய வேண்டும்? அவர் கோடீஸ்வரராக அல்லவா இருந்திருப்பார்? பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்து இந்தக் கொலையை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

போதைப்பொருளுடன் தொடர்புபட்டிருந்தாலும் நடுவீதியில் வைத்து சுட்டுக் கொல்ல முடியுமா? தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடம் கற்பிப்பதாகக் கூறிக்கொண்டு வந்தவர்களுக்கு இன்று தனிமனித பாதுகாப்பு தொடர்பில் கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.