உயிர்மாய்த்த மாணவி குறித்து அவதூறு: அமைச்சர் சரோஜாவைக் கண்டித்த மனோ.

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உயிர்மாய்த்த மாணவி மனநோயாளி அல்லர் எனவும், அவ்வாறு கூறியமைக்காக மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தினார்.
மேலும், அந்த வார்த்தைப் பிரயோகத்தை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கொட்டாஞ்சேனை மாணவி குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மனோ கணேசன் எம்.பிக்குப் பதிலளித்த சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், அந்த மாணவி தொடர்பான விவரங்களை முன்வைத்ததுடன், பெற்றோர்களை விசாரணைக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அவர்கள் அமைச்சுக்கு சமூகமளிக்கவில்லை எனவும் கூறினார்.
அதற்குப் பதிலளித்த மனோ கணேசன் எம்.பி., அமைச்சு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று விசாரிக்க வேண்டுமே தவிர, அவர்கள் உங்களிடம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்று சாடினார்.
அத்துடன் உயிர்மாய்த்த மாணவி மனநோயாளி என்று கூறியமைக்காக அமைச்சர் சரோஜா மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் கேட்டார்.
மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறுகையில்,
“இந்தச் சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடைபெற வேண்டும். குறிப்பிட்ட மாணவிக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கின்றது. அது உண்மை. இன்று (நேற்று) அந்த மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கும் இடத்தில் பொலிஸ் நீர்த்தாரைப் பிரயோக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கண்ணீர்ப் புகைப் பிரயோகத் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்படிச் செய்யாதீர்கள். அது தவறு.” – என்றார்.
இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, இந்தச் சம்பவம் குறித்து நீதியான விசாரணைகள் நடைபெறுகின்றன என்று குறிப்பிட்டார்.
அதன் பின்னர் பேசிய அமைச்சர் சரோஜா, மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும், தவறாக எதையும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார்.