ராய்ப்பூரில் கோர விபத்து: இழுவை லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் 13 பேர் பலி!

சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் இழுவை லாரி மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள், குழந்தைகள் என 13 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக ராய்பூா் முதுநிலை காவல் துறைக் கண்காணிப்பாளா் லால் உமேத் சிங் கூறுகையில், ‘பனா பன்சாரி கிராமத்தில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சரக்கு வாகனம் ஒன்றில் 35 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்.

ராய்பூா்-பலோடாபஜாா் சாலையில் சரகான் பகுதி அருகே வந்தபோது அந்த வாகனம் எதிரே வந்த இழுவை லாரி மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் 9 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 13 போ் உயிரிழந்தனா். தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்த காவல் துறை, காயமடைந்த 14 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது’ என்றாா்.

அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை ஓட்டியதே விபத்துக்குக் காரணமாக இருக்கக் கூடும் என்று காவல் துறை சந்தேகிக்கிறது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் கெளரவ் சிங் தெரிவித்தாா்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்தனை செய்வதாகவும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

இந்த சம்பவத்துக்கு வேதனை தெரிவித்த மாநில முதல்வா் விஷ்ணுதேவ் சாய், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.5 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

Leave A Reply

Your email address will not be published.