20 நாட்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்

தவறுதலாக எல்லை தாண்டி சென்ற இந்திய வீரரை பாகிஸ்தான் திரும்ப ஒப்படைத்துள்ளது.
கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றம் நிலவி வந்தது. அட்டாரி-வாகா எல்லையை மூடுவது, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி, பஞ்சாபின்பிரோஸ்பூரில் சர்வதேச எல்லைப்பகுதியில் BSF கான்ஸ்டபிள் பூர்ணம் குமார் ஷா(Purnam Kumar Shaw) என்பவர் சீருடையுடன் துப்பாக்கி ஏந்தியபடி காவலில் இருந்தார்.
அப்போது, ஓய்வுக்காக மர நிழலை தேடி சென்றவர், தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டதால், பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்தது.
இதனையடுத்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் காரணமாக, இரு நாடுகளுக்குமிடையே பெரும் போர் மூளும் சூழல் நிலவியது.
இந்நிலையில், கடந்த மே 10 ஆம் திகதி இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, 20 நாட்களுக்கு பிறகு, BSF வீரர் பூர்ணம் குமார் ஷாவை, அமிர்தசரஸின் அட்டாரியில் உள்ள கூட்டு சோதனைச் சாவடியில் இன்று காலை 10:30 மணியளவில் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்துள்ளது.
ஷா தற்போது பாதுகாப்பு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.