தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு! – முக்கிய ஆவணங்கள் பறிப்பு.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ உட்பட மூவரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்துவிட்டு துசித ஹல்லோலுவவுக்குச் சொந்தமான ஆவணங்களின் கோப்புகளைப் பறித்துச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தை பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் துசித ஹல்லோலுவ கண்டபடி விமர்சித்திருந்தார். அதையடுத்து அவர் சி.ஐ.டி. விசாரணையை எதிர்கொண்டிருந்தார்.
அதேவேளை, தேசிய லொத்தர் சபையில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக அவரிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.