அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான ‘புரோஸ்டேட்’ புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த 2021 – 2025 ஜன., வரை, அமெரிக்காவின் அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், 82, பதவி வகித்தார். இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட போதே, மறதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் ஜோ பைடன், தீவிர புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு, சமீபத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
கடந்த 16ம் தேதி பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோய் செல்கள் எலும்புக்குள்ளும் பரவியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
புரோஸ்டேட் புற்றுநோயின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் 1 – 10 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மிகத் தீவிரமான பாதிப்புக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பைடனுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கான பாதிப்பு 9 மதிப்பெண்ணாக உள்ளது. இது, புற்றுநோயின் தீவிரத்தை உணர்த்துவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நோய் தீவிரமாக இருந்தாலும், ஹார்மோனின் உணர்திறன் காரணமாக அதை குணப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது. பைடனுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து அவரின் குடும்பத்தினர், டாக்டர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர்.