இந்தியா-துருக்கி உறவுகளில் விரிசல்: பாகிஸ்தானுக்கு ஆதரவால் வர்த்தகத் தடைகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

கடைசி வாய்ப்பாக, பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு சொல்லுங்கள் என்று மத்திய அரசு துருக்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை செய்து வரும் துருக்கியுடன் வணிக ரீதியான உறவைத் துண்டித்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருக்கிறது. ஏற்கனவே, இந்தியாவிலிருந்து துருக்கிக்கு சுற்றுலா செல்லும் பயணத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆப்பிள், மார்பிள் உள்ளிட்ட சில இறக்குமதிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டையின்போது, பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் அனுப்பிய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்தே, துருக்கியுடனான நல்லுறவு மங்கத் தொடங்கியது.
சாமானிய மனிதர்கள் முதல் பெரு வணிகர்கள் வரை, துருக்கிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். இதற்கிடையே பாகிஸ்தானை பயங்கரவாதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்த வேண்டும் என துருக்கிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, துருக்கியுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துக் கொள்ளும்பட்சத்தில் பல இறக்குமதிகள் நிறுத்தப்படலாம். இதனால், நாட்டில் ஒரு சில பொருள்களின் விலை உயரும் அபாயமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மார்பிள்
இந்தியாவின் ஒட்டுமொத்த மார்பிள் தேவையில் 70 சதவீதம் துருக்கியிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஒருவேளை துருக்கியிலிருந்து மார்பிள் இறக்குமதி நிறுத்தப்பட்டால், விலை உயர்ந்து, கட்டுமானப் பணிகள் பாதிக்கும், வீடுகளின் விலை அதிகரிக்கும்.
ஆப்பிள்
ஏற்கனவே துருக்கியிலிருந்து ஆப்பிள் இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளது. இந்தியா ஆண்டுதோறும் துருக்கியிலிருந்து 1.29 லட்சம் டன் ஆப்பிள் இறக்குமதி செய்யும். ஏற்கனவே ஏழைகள் வாங்க முடியாத விலையில் விற்பனையாகும் ஆப்பிள், இனி பணக்காரர்களுக்கும் பகல் கனவாகும் அபாயம் உள்ளது.
தரைவிரிப்புகள்
பருத்தி மற்றும் பட்டு தரைவிரிப்புகள் என்றாலே துருக்கிதான். இந்தியாவில் விற்பனையாகும் நேர்த்தியான தரைவிரிப்புகள் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவையாக இருக்கும். ஒருவேளை இறக்குமதி ரத்து செய்யப்பட்டால் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
மரச் சாமான்கள்
துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உள் அலங்கார மற்றும் மரச் சாமான்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கும் நிலையில், அதுவும் பாதிக்கப்படலாம்.
இது அல்லாமல், செர்ரி பழங்கள், உலர் பழங்கள், வாசனைப் பொருள்கள், மருத்துவ குணம் வாய்ந்த தேயிலை, நகைகள், அலங்காரப் பொருள்கள், ஆலிவ் எண்ணெய், சாக்லேட்டுகள் என பல பொருள்கள் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், அது நிறுத்தப்பட்டால், இங்கு கிடைக்கும் பொருள்களின் விலை கணிசமாக உயரும் அபாயம் உள்ளது.
ஏற்றுமதி நிலவரம்
துருக்கிக்கு 2024 ஏப்ரல் – 2025 பிப்ரவரி வரையில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.44,500 கோடியாகக் குறைந்துள்ளது. இது 2023 – 24ஆம் ஆண்டில் 56,873 கோடியாக இருந்துள்ளது.