மத நல்லிணக்கத்துக்கு ஒரு மகத்தான உதாரணம்: மழையால் நின்ற இந்து திருமணத்திற்கு மண்டபம் கொடுத்து உதவிய முஸ்லிம் குடும்பம்!

புணேவின் வான்வொரி பகுதியில், திறந்தவெளியில் நடைபெறவிருந்த ஹிந்து திருமணச் சடங்குகள் கனமழையால் நின்றுபோன நிலையில், முஸ்லிம் குடும்பத்தினர், தங்களது திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் இடம்கொடுத்து உதவியிருக்கிறார்கள்.

முஸ்லிம் குடும்பத்தினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபத்திலேயே, இந்து தம்பதி தங்களது திருமணச் சடங்குகளை செய்துகொள்ள இடம் ஒதுக்கிக் கொடுத்து மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக மாறியிருக்கிறார்கள்.

புணேவைச் சேர்ந்த பட்டீல் குடும்பத்தினர், அலங்காரன் அரங்கில் திறந்தவெளியில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். திருமண வைபவம் தொடங்கியபோது கனமழை வெளுத்து வாங்கியது. அங்கிருந்த விருந்தினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்தனர்.

அப்பகுதிக்கு அருகே இருந்த முஸ்லிம்களுக்கான திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. உடனே பட்டீல் குடும்பத்தினர், முஸ்லிம் குடும்பத்தை அணுகி, தங்களது திருமணச் சடங்கை நடத்திக் கொள்ள இடம் கேட்டுள்ளனர். உடனடியாக அதற்கு ஒப்புதல் கிடைத்த நிலையில், முஸ்லிம் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்களும், இந்து திருமணம் நல்லபடியாக நடக்க இடத்தை ஒதுக்கிக் கொடுக்க உதவியுள்ளனர்.

ஒரே அரங்கில் இந்து திருமணமும், முஸ்லிம் திருமண வரவேற்பும் இனிதே நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்ல, திருமண மேடையில், இரு தம்பதியும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதுதான் ஆச்சரியம்.

Leave A Reply

Your email address will not be published.