தமிழ்க் காங்கிரஸ், தமிழரசு பெரும்பான்மை பெற்ற இடங்களில் அந்தக் கட்சிகள் ஆட்சி அமைக்கப் பூரண ஆதரவு வழங்குவோம்! – ‘சங்கு’ கூட்டணி சத்தியம்.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அந்தக் கட்சிகள் ஆட்சி அமைக்க முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துகாெண்டு கருத்துத் தெரிவித்தபாேதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று (நேற்று) இடம்பெற்றது. அடுத்த மாதம் கூடும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக ஆராய்நதோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருககும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்று உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் 106 ஆசனங்களை வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெற்ற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏனைய தமிழ்க் கட்சிகளின்.ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது எனவும், பல்வேறு சபைகளில் ஏனைய தமிழ்க் கட்சிகளான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அந்தக் கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளாேம்.

இரண்டு தடவைகள் தமிழரசுக் கட்சியுடன் இது தொடர்பில் பேசியுள்ளாேம். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியுடனும் பேசியுள்ளாேம். அந்த அடிப்படையை வைத்துத்தான் பேசினாேம். தமிழ்க் கட்சிகளுடன்தான் நாம் பேசியுள்ளாேம். ஏனைய தேசிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது எனத் தீர்மானம் இல்லை. ஆனால், ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு அவர்கள் ஆதரவு வழங்கினால் அது அந்தக் கட்சியின் நிலைப்பாடே ஆகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.