தமிழ்க் கட்சிகளின் ஆதரவுடன் செட்டிகுளம் பிரதேச சபையை கைப்பற்றியது ரிஷாத் தரப்பு!
வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ரிஷாத் தரப்பு உறுப்பினர் தாஜுதீன் முகமது இம்தியாஸ் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தேவசகாயம் சிவனாந்தராசா உப தவிசாளராகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபைக்கான தவிசாளர், உப தவிசாளர தெரிவு, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இதன்போது தவிசாளர் தெரிவைப் பகிரங்கமாக நடத்துமாறு 12 உறுப்பினர்களும், இரகசியமாக நடத்துமாறு 6 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.
பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடத்தப்பட்டது.
அந்தவகையில் தவிசாளராகப் பெயர் பிரேரிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இம்தியாஸுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட தாவீது இசையாஸ் மிராலுக்கு 6 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.
இதனடிப்படையில் முகமது இம்தியாஸ் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அவருக்கு ஆதரவாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்ளும், ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும், ஜக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.
இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உப தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் தேவசகாயம் சிவானந்தராசாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
உப தவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தேவசகாயம் சிவானந்தராசா அந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவின் போது வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









