வாகன விபத்துக்களில் ஐவர் பரிதாப மரணம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நுரைச்சோலை, வெல்லவாய, ஹோமாகம மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுகளில் நேற்று இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி – கற்பிட்டி வீதியில் தலுவ 6 ஆவது மைல்கல் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனியார் பஸ் ஒன்று வீதியின் இடது பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது, பஸ்ஸில் இருந்த இருவர் பஸ்ஸில் இருந்து இறங்கி பஸ்ஸின் பின்னால் காத்திருந்த நிலையில், பாலாவி திசையில் இருந்து கற்பிட்டு திசை நோக்கிச் சென்ற லொறி ஒன்று இருவர் மீதும் பஸ் மீதும் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் 15 மற்றும் 74 வயதான ஜா-எல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனகராயன்குளம் பொலிஸ் பிரிவில் ஏ – 9 வீதியில் புதுக்குளம் சந்தி பகுதியில் பயணித்த ஓட்டோ திடீரென வீதியின் வலது புறம் திரும்பிய போது, அதே திசையில் பயணித்த பஸ்ஸுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஓட்டோ சாரதியும் அதில் பயணித்த இரண்டு பயணிகளும் படுகாயமடைந்து, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் நெடுங்கேணியைச் சேர்ந்த 46 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய பொலிஸ் பிரிவின் எல்ல-வெல்லவாய வீதியில் 6 ஆவது மைல்கல் பகுதியில் லொறி ஒன்று வளைவில் பயணித்துக் கொண்டிருந்த போது, பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. விபத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்து வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பண்டாரவளை, துங்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம பொலிஸ் பிரிவின் ஹைலெவல் வீதியில் உள்ள பிடிபன சந்தியில், பஸ் ஒன்று, கிளை வீதியில் இருந்து ஹைலெவல் வீதிக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாவத்கம, ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 45 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.