யாழ். மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாயில் போராட்டம்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். மாநகர சபையினரால் சேகரிக்கப்படும் கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் கொட்டுவதனை நிறுத்தும்படி கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாநகர சபை கழிவுகளை ஏற்றி வந்த உழவு இயந்திரங்கள் கல்லுண்டாய் பகுதியில் மக்களால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டன.

கல்லுண்டாய் பகுதி குப்பை மேட்டில் நேற்று சனிக்கிழமை இரவு திடீரெனத் தீ பிடித்தமையால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் அந்தப் பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், சுவாசப் பிரச்சினையுடையவர்கள், சிறுபிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினர் ஐம்பது வீடுகளில் இருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

கல்லுண்டாய் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதனால் அயலில் வசிக்கும் மக்கள் சுகாதாரப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன், நிலத்தடி நீரும் மாசடைவதால் அயல் கிராம நன்னீர் நிலைகளும் பாதிக்கப்பட்டு வருவதனால் குப்பைகளக் கொட்ட வேண்டாம் எனப் பல வருட காலமாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கைகளை விடுத்து வருவதுடன் பல்வேறு சந்தர்பங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வாக்குறுதிகளை நம்பி போராட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியும் வந்திருந்தனர்.

ஆனாலும், மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி தொடர்ந்து யாழ். மாநகர சபை, கல்லுண்டாய் பகுதியிலேயே குப்பைகளைக் கொட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
………………….

Leave A Reply

Your email address will not be published.