வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மைதானத்துக்குக் காணி! – பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்.
வவுனியா விபுலானந்தாக் கல்லூரிக்கு விளையாட்டு மைதானத்துக்கான காணி வழங்குவதற்குப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், “வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரிக்கு விவசாயக் காணியை மைதானத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கமநல அபிவிருத்தித் திணைக்களம் அதனை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளது. காணி ஆணையாளருக்கும் விடுவித்து தருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, பிரதேச செயலக மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதனை விடுக்கத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.” – என்று கோரினார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்தக் காணியை வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
