கண்மணியே பேசு…   

கண்மணியே பேசு

பாகம் மூன்று –

கோதை 

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பசுத்தோல் போர்த்திய புலியினால் மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருத்தியின் வாழ்வியல் சம்பவங்களின் கோர்வையாய் ‘கண்மணியே பேசு’ வெளிவருகிறது. இது இவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது இன்னும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற  ஏனைய  பெண்களுக்கு ஒரு வடிகோலாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வழி சமைக்கட்டும்.

************************************************************************************************

பறவைகளின் பாடல்கள் கேட்கக் கூடிய இடமாக அவள் வீடு அமைந்திருந்தது அதிகாலையில் துயில் நீங்கவும் அவர்களின் கீதங்களைக் கேட்கவும் அவளுக்கு வசதியாகவே இருந்தது. இன்று இன்னும் விசேஷமாக அவர்கள் கீச்சிட்ட குரலில்  சிறகடித்துப்  பேசியது  அவளது விடியலை இன்னும்  அதிகமாக  சிலிர்ப்படைய வைத்தது. அவர்கள் உலகத்தில் அப்படி என்னதான் பேசிக் கொள்வார்கள்?  அவளையுமறியாமல் அவள் வாய்விட்டு சிரித்துக் கொண்டாள்.

அதே வேளையில் சொல்லி வைத்தாற்போல் அவளது ஒலிப்பதிவு கருவியிலிருந்து, ஆறு மணியாகி விட்டதை,  அவள் ஏற்கனவே பதிவு செய்து வைத்த பாடல்களில் ஒன்று பாடத் தொடங்கியிருந்தது.

“கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ! எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…”

அவள் கண்ணானவனுக்குப் பிடித்திருந்த பாடல்களில் ஒன்று அவள் மனத்திலும் இடம் பிடித்திருந்தது.

அவள் நினைவுகள் பின்னோக்கி பறந்தன. என்னவொரு   நிம்மதியான,  ஆனந்தமான  காலப்பகுதி அது.  அவள் வாழ்விலும்  வசந்த காலம் வானவில் போல் வந்து போனதை அவள் நினைத்துப் பார்க்கையில் நெஞ்சில் இனம் தெரியாத வலி ஒன்று வந்து மறைந்தது. அவளையறியாமல் எட்டிப்பார்த்த கண்ணீரை,  அவள் கரம் பிடித்து வாழ்ந்து இரண்டு குழந்தைகளையும் பரிசாக்கியது மட்டுமல்ல அவள் கண்களில் எப்போதுமே கண்ணீரைப் பார்க்கக் கூடாதென்ற தன் எண்ணத்தையும் நிஜமாக்கியவனின் நினைவுகள் தடுத்து நிறுத்தின.

 

என்னவனை எப்படி இப்படி இழந்தேன்? இழப்பு என்பது எவ்வளவு கொடியது என்பது தெரியாத வயதிலேயே தந்தையை இழக்க வைத்ததன் மூலம் அவளுக்குப் புரிய வைத்த வாழ்க்கையை பல சவால்களுக்கு மத்தியில் கடந்து வந்தவளுக்கு, மீண்டும் ஒரு முறை எட்டி உதைத்து அழகு பார்க்கும் வாழ்வை எப்படித் தான் ரசிப்பது என்பது புரியாதவளாய் துவண்டு போனாள்.   குறுகிய காலப்பகுதியில்  அவளுக்குக் கிடைத்த பரிசுத்தமான அன்பு தான் அவளை இன்று வரை வாழ வைக்கிறது என்பதோடு, இன்றுவரை அவன் அவளுடன்  மானசீகமாக வாழுவதாயே அவள் மனம் எண்ணிக்கொண்டும் இருக்கிறது.

புற்று நோய் காவு கொண்ட அழகிய ஆத்மாக்களில் ஒன்றாய் கலந்து விட்டவனை,  அவனின் இறுதிக் காலங்களில் உயிருக்கு உயிராய் அவள் பராமரித்த காலப்பகுதி அவளுக்குள் ஒரு வைராக்கியத்தை விதைத்துப் போயிருந்தது.  இரண்டு சிறிய உயிர்களை, ரோஜாப்பூக்களாய் அவளுக்காக அவன் விட்டுப் போயிருக்கா விட்டால் இந்தத் திடம் அவளுக்கு வந்திருக்குமா என அவளுக்கும் தெரியவில்லை.

உடல் தன்னிச்சையாய் இயங்கியதில் அவள் குளித்து முடித்து, ஒரு தேனீரோடு அவளது வீட்டின் அழகான இருப்பறை நோக்கி நகர்ந்திருந்தாள். இதே அறையில் என் கைகளில்த் தானே அவன் உயிர் பிரிந்திருந்தது. அவளால் அந்தக் கணத்தை எத்தனை முறை இரை  மீட்ட போதும் ஜீரணிக்கவே முடியவில்லை. கணவனின் படத்தைப் பார்த்தவளுக்கு, அந்தக்  கம்பீரமான முகத்தில் தெரிந்த அந்தப் பெருமை அவளைத் தட்டிக் கொடுப்பதற்கே என்பது போல இருந்ததில் அவளுக்கு மனத்தில் சின்னதாய் ஒரு அமைதி தோன்றி மறைந்தது.

அனைத்து விதமான சிக்கல்களையும் இந்தா பிடித்துக் கொள், பிடித்துக் கொள் என்று அள்ளி எறிந்த வாழ்க்கை ஒரு அற்புதமான குரலை அவளுக்கு தந்திருந்ததை, தன் சிக்கல்களிலிருந்து தன்னை தற்காலிகமாக மீட்டெடுக்கும் கருவியாகப் பாவிக்கும் தந்திரமாய் அவள் மாற்றிக் கொண்டாள். வலித்த மனது கனக்கத் தொடங்கிய போது அவள் குரல் அவளையறியாமலே  மதுரமாய்ப் பாடத் தொடங்கி இருந்தது  .

 

“என்னவோ என்னவோ என்வசம் நானில்லை…

என்னதான்  சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை …

உன் சுவாசத்திலே  நான் சேர்ந்திருப்பேன்…

உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்..

உன் சுவாசத்திலே  நான் சேர்ந்திருப்பேன்…

உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்..

என்னோடு நீயாக… உன்னோடு நானாக… பிரியமானவனே…”

 

-கண்மணி பாடல்களோடு உயிர்த்தெழுந்தாள்…

 

 

Leave A Reply

Your email address will not be published.