யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.

“யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். இல்லாது விட்டால் பங்குபற்றாது விட வேண்டிய நிலைமை ஏற்படும்.” – என்று யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகர் மற்றும் இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கங்கள், கூச்சல்கள், குழப்பங்கள் இடம்பெற்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம். அமைச்சர்களாக இருக்கலாம். எங்களை அழைத்தால் கண்ணியமாக நடத்த வேண்டும்.

இங்கு வந்து கத்துவதால், பேசுவதால் மாரடைப்பு, பக்கவாதம், நித்திரையின்மை நோயாளிகளாக உருவாக்க வேண்டாம்.

இங்கு வந்தால் எம்மைக் குழப்புகின்ற வகையில் இருக்கின்றது. உரத்த சத்தம் போடுவதால் உண்மையான அபிவிருத்தி நடக்கப் போவதில்லை. நாங்கள் மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றோம்.

ஒழுக்கமாக பண்புகளுடன் நடத்தப்பட வேண்டும். எங்களை அவமரியாதைப்படுத்தினால் இந்தக் கூட்டத்தில் இருந்து வெளியே போக முடியும். தொடர் கூட்டத்துக்குப் பங்குபற்றாது விட முடியும்.” – என்றார்.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற இ.அர்ச்சுனா, “கணக்கு வழக்குகளைக் கேட்டால் ஏன் பதற்றமடைய வேண்டும்? கேள்விகள் கோட்டால் பக்கவாதம் மட்டுமல்ல மாரடைப்பும் வரும். ஆனால் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்போம்.” – என்றார். கேள்வி கேட்க முடியாவிட்டால் இந்தக் கூட்டத்துக்கு வரவில்லை எனவும் அர்ச்சுனா எம்.பி. தெரிவித்தார். அப்போது சபையில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இதையடுத்துக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பென்னம்பலம், “நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி கேட்கலாம். ஆனால், அதற்குப் பதில் வழங்காதுவிட்டால் அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் போகலாம். இதனை விடுத்து தனிநபரைப் பற்றிக் கதைப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.” – என்றார்.
……………………

Leave A Reply

Your email address will not be published.