பஸிலைக் கண்டறிய சர்வதேசப் பொலிஸாரின் நீல அறிவித்தல்! – பொலிஸ்மா அதிபர் தகவல்.

மாத்தறை பிரவுன்ஸ்ஹில் காணி கொள்வனவு மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல் காலப்பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி 12 ஆயிரம் ரி-ஷேர்ட்டுகளை விநியோகித்தமை தொடர்பான விசாரணைகளில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ தொடர்பில் சர்வதேசப் பொலிஸாரின் (இன்டர்போல்) உதவியை நாடியுள்ளதாகப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் தங்கியுள்ள பஸில் ராஜபக்ஷவை அடையாளம் கண்டு, அவர் தங்கியிருக்கும் இடம் மற்றும் தொடர்புடைய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்டர்போல் ஊடாக இந்த நீல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பிரவுன்ஸ்ஹில் பகுதியில் 1.5 ஏக்கர் காணி ஒன்றை 60 மில்லியன் ரூபாவுக்குக் கொள்வனவு செய்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மாத்தறை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் மேலும் பலர் சந்தேகநபர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் அவருக்கு எதிராக மீண்டும் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, பஸில் ராஜபக்ஷ வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றார் என்று அவரது சட்டத்தரணிகள் முன்னதாக நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்டர்போலின் நீல அறிவித்தல் என்பது ஒருவரை சர்வதேச ரீதியில் கைது செய்வதற்கான பிடியாணை அல்ல. மாறாக, குற்றவியல் விசாரணையொன்றுடன் தொடர்புடைய நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் சர்வதேச எச்சரிக்கை முறைமையாகும்.

இதற்குப் புறம்பாக, சிவப்பு அறிவித்தல் என்பது ஒருவரைக் கண்டறிந்து, நாடு கடத்தல் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்காலிகமாகக் கைது செய்யுமாறு சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்குக் கோரும் தன்மையுடையதாகும்.

தற்போது பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக நீல அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை இலங்கைக்கு மீள அழைத்து வருவதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.