அவசரகாலச் சட்ட விதிமுறைகளால் அடிப்படை உரிமையை மீறிய ரணில் – உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி அரகலய போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவரசகாலச் சட்ட விதிமுறைகளினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
இதற்கமைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 2 ஆவது விதிமுறையின் கீழ் பிரகடனப்படுத்திய அவசரகாலச் சட்ட விதிமுறைகள் தன்னிச்சையானதும் அதிகாரமற்றதுமான செயற்பாடு என்று மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தினர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன், லிபரல் இளைஞர் இயக்கத்தினர், மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் அதாம் லெப்பே ஆசாத், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலுடன் பணிபுரியும் சர்வதேச மனித உரிமை ஆர்வலரான லக்ஷ்மணன் சஞ்சீவ் ஆகியோர் இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
