இலட்சக்கணக்கான உயிர்களைக் கொடுத்து எடுத்த மாகாண சபை முறைமை தமிழர் வசமாக வேண்டும் – தமிழ் மக்கள் பேரவையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரமே செயற்படுகின்றோம் என்றும் சுரேஷ் தெரிவிப்பு.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கான உயிர்களைக் கொடுத்து எடுத்த மாகாண சபை முறைமை அவர்கள் வசம் செல்ல வேண்டும் எனவும், தமிழ்த் தேசியப் பேரவையின் புரிந்துணர்வு ஒப்பந்தின் பிரகாரமே செயற்படுகின்றோம் எனவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்மட்டக் கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும், எமது எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், கிராம மட்டங்களில் கட்சிக் கட்டமைப்பை விஸ்தரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடியிருக்கின்றோம். மாவட்ட மட்டக் குழுக்களை அமைத்து அதன் ஊடாக இதனை முன்னகர்த்துவது எனத் தீர்மானித்துள்ளோம்.
அதேபோல் வடக்கு, கிழக்கில் உள்ள எமது உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மட்ட உறுப்பினர்களையும் இணைத்த கூட்டங்களை விரைவாக நடத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம்.
அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகப் பார்கின்றபோது மாகாண சபை தேர்தல் தொடர்பாக அரசு பல்வேறுபட்ட முரணான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றது. சில அமைச்சர்கள் விரைவாக மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்று கூறினாலும், பிரதம மந்திரி மற்றும் சில அமைச்சர்கள் மாகாண சபை தொடர்பான எல்லைகள் வகுக்கப்பட்ட பின்னர்தான் தேர்தல் எனக் கூறுகின்றனர்.
ஆகவே, தமிழ் மக்கள் மத்தியில் இது தொடர்பில் அச்ச உணர்வு காணப்படுகின்றது. இந்தத் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற நிலை உள்ளது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைப் பொறுத்த வரை மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் வரவிருக்கும் வரவு – செலவுத் திட்டத்தின் பிற்பாடு இந்தத் தேர்தலை நடத்துவதற்கன ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதற்கான சட்ட திருத்தங்கள் ஏதாவது கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் அதனைக் கொண்டு வந்து தேர்தல் என்பது உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கை.
மாகாண சபை முறைமை கூட தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாகத்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை ஒருபுறம் தள்ளிவிட்டு அரசுகள் செயற்படுகின்றன.
கடந்த 7 வருடங்களாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அந்தத் தேர்தல் நடைபெற வேண்டும்.
இலங்கையில் இருக்கக் கூடிய ஜனநாயகக் கட்டமைப்புக்களை காப்பாற்றுவதாக இருந்தால் அரசு இந்தத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அவர்கள் எதிர்த் ரப்பில் இருக்கும் போது அதற்காக குரல் கொடுத்தார்கள். தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் அரசு எனக் கூறினாலும் எவ்வாளவு விரைவாக நடத்தப்படும் என்ற கேள்வி எழுகின்றது. குறைந்த பட்சம் அடுத்த வருட ஆரம்பத்தில் என்றாலும் இந்தத் தேர்தலை நடத்த வேண்டும்.
தமிழ் மக்கள் ஐக்கியபட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. நாங்கள் ஐந்து அமைப்புக்களின் கூட்டாக இருக்கின்றோம். ஏனைய தரப்புக்களையும் இணைத்துச் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
தற்போதைய சூழ் நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கான உயிர்களைக் கொடுத்து எடுத்த மாகாண சபை முறைமை அவர்கள் வசம் செல்ல வேண்டும். அவர்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய சூழல் ஏற்பட வேண்டும். ஆகவே எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும்.
கடந்த காலத்தைப் போல் நாம் கூட்டாக இயங்கியிருந்தால் அதிக வாக்குப் பலத்தைப் பெற்றிருந்ப்போம். கடந்த நாடாளுன்றத் தேர்தலில் நாம் அந்தத் தவறை விட்டோம். அவ்வாறு இல்லாமல் மாகாண சபைத் தேர்தலில் இணைந்து செயற்பட வேண்டும். அந்த முடிவையும் நாம் எடுத்துள்ளோம்.
தமிழ்த் தேசிப் பேரவையில் இருந்து நாங்கள் விலத்திச் சென்றதாகக் கஜேந்திரகுமார் சொல்லவில்லை. விலத்திச் செல்வதாகத்தான் கருதுவதாகவே அவர் சொல்லியிருக்கின்றார். நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றோம். நாங்கள் அந்த ஒப்பந்தத்துக்கு முரணாகக எதுவும் செய்யவில்லை. உத்தியோகபூர்வமாக விலத்தியதாக அவர் அறிவிக்கவில்லை. நாங்களும் விலத்தியதாக எங்கும் சொல்லவில்லை. எனவே இது தொடர்பாக அவர்களுடன் பேசுவோம்.
அத்துடன், 13 ஆவது திருத்தமே இலங்கை அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய ஒரு விடயம். அவ்வாறான விடயம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. நாம் மட்டுமல்ல தமிழரசுக் கட்சி உட்பட பல தரப்புக்கள் அந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்தவர்கள் கூட அவ்வாறான ஒரு தேர்தல் வந்தால் அதில் போட்டியிடுவோம் என்று கூறுகின்றார்கள். தேர்தலை நடத்துமாறு கோரிக்கை வைப்பதும் பிழையானது இல்லை எனவும் அவர்கள் கூறுகின்றார்கள்.
எனவே, அவர்களும்தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருக்கின்றர்கள் என்பது எனது கருத்து. அவர்கள் இதனைப் பிழையாக விளங்கியிருந்தால் இது தொடர்பாக அவர்களுடன் நாங்கள் பேசுவோம்.” – என்றார்.
