பருத்தித்துறை நகரத்தின் மரக்கறிச் சந்தையை பழைய இடத்துக்கு மாற்றக் கோரி போராட்டம்! – புதிய இடத்தில் அதிகாலை முதல் வழமை போல் இயங்கிய சந்தை.
பருத்தித்துறை, முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள புதிய மரக்கறி சந்தையை முன்னர் இருந்த நவீன சந்தை கட்டடத் தொகுதிக்கு இடமாற்றுமாறு கோரி பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வர்த்தக சங்கத்தினருடன் ஓட்டோ உரிமையாளர் சங்கம் மற்றும் சில மரக்கறி வியாபாரிகள் ஒன்றிணைந்து பருத்தித்துறை நவீன சந்தைக் கட்டட வாசலில் இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பித்த கவனவீர்ப்புப் போராட்ட பேரணி நகரின் ஒருவழி பாதை துறைமுக வீதி வழியாக பருத்தித்துறை நகர சபை வாசலை அரைமணி நேரத்தில் சென்றடைந்தது.

சுமார் இருநூறு பேர் வரை மேற்கொண்ட இந்தப் பேரணி நகர சபை வாசலில் குழுமி நின்று மரக்கறி சந்தையை பழைய இடத்துக்கு மாற்றுமாறு கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சன்ட் போல் டக்ளஸ் போல், பருத்தித்துறை நகர சபை செயலாளர் திருமதி தாரணி கஜரூபன் ஆகியோரிடம் பருத்தித்துறை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சந்தையை மாற்றுமாறு கோரி மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

போராட்டம் நடைபெற்ற இதேவேளை புதிய மரக்கறி சந்தை அதிகாலை முதல் வழமை போல் இயங்கியது.
இன்றைய சந்தை வியாபாரத்தின் போது ஒருசில மரக்கறி வியாபாரிகள் தவிர ஏனைய வியாபாரிகள் தமது வியாபாரத்தை மேற்கொண்டனர்.
