தோல்வியை பெற்ற பெங்களூர் அணி போட்டியில் இருந்து வெளியேறியது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் அணி, பெங்களூருவை வீழ்த்தி வெளியேற்றியது.

அபுதாபியில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் புள்ளி பட்டியலில் முறையே 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளான முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பெங்களூரு அணியில் 4 மாற்றமாக காயம் அடைந்த கிறிஸ் மோரிஸ் மற்றும் ஜோஷ் பிலிப், ஷபாஸ் அகமது, உதனா நீக்கப்பட்டு ஆரோன் பிஞ்ச், ஆடம் ஜம்பா, நவ்தீப் சைனி, மொயீன் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் காயம் அடைந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு பதிலாக ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி இடம் பெற்றார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணியின் கப்டன் டேவிட் வார்னர் களதடுப்பை தேர்வு செய்தார். இதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக கப்டன் விராட்கோலி, தேவ்தத் படிக்கலுடன் இணைந்து களம் இறங்கினார். அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 2-வது ஓவரிலேயே விராட்கோலி (6 ரன், 7 பந்து) ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் கையுறையில் பந்து பட்டு விக்கெட் கீப்பர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். 4-வது ஓவரில் தேவ்தத் படிக்கல் (1 ரன்) விக்கெட்டையும் ஜாசன் ஹோல்டர் கைப்பற்றினார். அப்போது அணியின் ஸ்கோர் 15 ரன்னாக (3.3 ஓவரில்) இருந்தது.

இதனை அடுத்து டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்சுடன் ஜோடி சேர்ந்தார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) அந்த அணி 2 விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்து இருந்தது. ஐதராபாத் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் அணியின் ஓட்ட விகிதம் மெதுவாகவே உயர்ந்தது. ஆரோன் பிஞ்ச் 30 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன் எடுத்த நிலையில் ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் அப்துல் சமாத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிளந்தார். அடுத்து வந்த மொயீன் அலி (0) அதே ஓவரில் ‘பிரிஹிட்’ பந்தில் ரஷித்கானால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து களம் கண்ட ஷிவம் துபே 8 ரன்னில் ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று போராடிய டிவில்லியர்ஸ் அரைசதத்தை கடந்தார். அவர் அடித்த 5-வது அரைசதம் இதுவாகும். 15.5 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை கடந்தது. தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் வீசிய ஒரே ஓவரில் வாஷிங்டன் சுந்தர் (5 ரன்), டிவில்லியர்ஸ் (56 ரன்கள், 43 பந்து, 5 பவுண்டரி) ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றினார்.

20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. நவ்தீப் சைனி 9 ரன்னுடனும், முகமது சிராஜ் 10 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஐதராபாத் அணி தரப்பில் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டும், டி.நடராஜன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 132 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ரன் எதுவும் எடுக்காமலும், கப்டன் டேவிட் வார்னர் 17 ரன்னிலும், மனிஷ் பாண்டே 24 ரன்னிலும், பிரியம் கார்க் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 67 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

5-வது விக்கெட்டுக்கு ஜாசன் ஹோல்டர், கேன் வில்லியம்சனுடன் இணைந்தார். இந்த ஜோடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை நவ்தீப் சைனி வீசினார். ஜாசன் ஹோல்டர் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசி அணி வெற்றி இலக்கை எட்ட உதவினார். 19.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 44 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னும், ஜாசன் ஹோல்டர் 20 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 24 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணி தரப்பில் முகமது சிராஜ் 2 விக்கெட்டும், ஆடம் சம்பா, சஹால் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட  பெங்களூர் அணி போட்டியில் இருந்து வெளியேறியது. வெற்றி பெற்ற ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.