கோடரியால் மனைவியைத் தாக்கிவிட்டு கிணற்றில் குதித்து கணவர் தற்கொலை!

முல்லைத்தீவு, குமுழமுனைப் பகுதியில் கணவர் கோடாரியால் மனைவியைத் தாக்கிவிட்டு, கிணற்றில் குதித்து உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் வசித்து வந்த 75 வயதான கணவருக்கும் 73 வயதுடைய மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டிருந்தது. கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு உணவருந்தி நித்திரைக்குச் சென்ற கணவர், இன்று வெள்ளிக்கிழமை காலை கோடாரியைக் கொண்டு மனைவியின் தலையில் தாக்கினார்.

அதன் பின்னர், அந்தக் கணவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தை வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் சிசிரிவி காணொளி மூலமாக நேரடியாகப் பார்வையிட்டதையடுத்து, உடனடியாக உறவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், உறவினர்கள் வீட்டுக்குச் சென்று மனைவியை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

தலையில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் விரிவான சோதனைகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்த கணவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.