மூன்றரை மாதங்களுக்கு தள்ளிப் போனது தமிழரசு வழக்கு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் பதில் நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் எதிராளிகளில் ஒருவரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பதவியில் இருந்து விலகி, காலமானமையை அடுத்து அவரது இடத்துக்கு இடையீட்டு எதிராளியாகக் கட்சியின் புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானம் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தார். முன்னைய எதிராளியான பழைய தலைவர் மாவை சேனாதிராஜா ஏற்கனவே இவ்வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்திருக்கின்றமையால் அவரது இடத்துக்குப் புதிதாக வரும் இடையீட்டு எதிராளி பதில் மனுவைத் தாக்கல் செய்ய முடியாது, அதனை நிராகரிக்க வேண்டும் என்று எதிராளிகளான சிறீதரன் எம்.பி. மற்றும் குகதாசன் எம்.பி. ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இன்று மனுச் செய்தார்.
அந்த விண்ணப்பத்தை நிரந்தர நீதிபதி முன்னிலையில் சமர்ப்பிக்கும் படி பதில் நீதிபதி பணித்தார்.
எதிராளிகளான சிறீதரன் மற்றும் குகதாசனின் சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைவாக வழக்கு மூன்றரை மாதங்களுக்கு மேலாக எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய நீதிமன்ற நிகழ்வுகள் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்த வழக்கின் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்,
“இந்த வழக்கில் இடையீட்டு எதிராளியான சி.வி.கே.சிவஞானம் சேர்க்கப்பட்ட போது இந்த இரண்டு எதிராளிகள் (சிறீதரனும் குகதாசனும்) அதனை ஆட்சேபிக்கவில்லை. பின்னர் அவர் வழக்கு தொடர்பான தமது பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரிய போதும் அதையும் ஆட்சேபிக்கவில்லை. அதன் பின்னர் அவர் பதில் மனுத் தாக்கல் செய்த சமயமும் அதை ஆட்சேபிக்கவில்லை. இப்போது பதில் மனுவை வாசித்து விட்டு வந்து, அது தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதைப் புரிந்துகொண்டு அதற்கு எதிராக இப்போது ஆட்சேபம் தெரிவிக்கின்றார்கள்.” – என்று குறிப்பிட்டார்.
