சவாலாக மாறிவரும் சிறைக் கொத்தணிகள்: 110 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி!



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் 3ஆவது அலையின் தாக்கம் அதிரித்து வரும் நிலையில் சிறைச்சாலைகள் புதிய கொத்தணிகளாக மாறி வருவது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இதுவரை வெலிக்கடை, போகம்பர மற்றும் மாத்தற சிறைகளில் இதுவரை 108 கைதிகள் உள்ளிட்ட 110 பேருக்குக்  கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சிறை நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையர் சந்தனா ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனாத் தொற்று உறுதியான கைதிகளின் மொத்த எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெண் கைதிகள் 89 பேரும், ஆண் கைதிகள் 11 பேரும் உள்ளடங்குகின்றனர். இதுதவிர சிறைப் பாதுகாப்பு விவரங்களுக்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் விசேட பணி அதிகாரி ஒருவருக்கும், சமையல்கார ஊழியர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, போகம்பர சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கும், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மாத்தறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு 110 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமையானது சிறைச்சாலைக் கொத்தணிகளை உருவாக்குமாக இருந்தால் மற்றொரு பேரவலமாக மாறக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.