பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!
இலங்கை நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது.
தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலையில், இந்த அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், அபிவிருத்தி அதிகாரிகளும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இவை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுவதால், நாளை நாடாளுமன்ற அமர்வு நடைபெறாது. அதனைத் தொடர்ந்து 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளன.
அதேவேளை, அரசமைப்பு பேரவையும் இன்று கூடவுள்ளது. புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் இதன்போது இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
