மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது.

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் டெல்லியை எளிதில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது.

இந்த நிலையில் கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் நேற்றிரவு துபாயில் பலப்பரீட்சையில் குதித்தன. டெல்லி அணியில் மாற்றம் இல்லை. மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக ராகுல் சாஹருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில்துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதன்படி மார்கஸ் ஸ்டோனிசும், ஷிகர் தவானும் டெல்லி அணியின் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஸ்டோனிஸ் (0) விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். சற்றே எழும்பி வந்த பந்து அவரது பேட்டின் விளம்பில் பட்டு விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கின் கையில் சிக்கியது. அடுத்து வந்த ரஹானேவும் (2 ரன்) போல்ட்டின் பந்து வீச்சுக்கு ஆட்டமிழந்தார் . மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் (15 ரன்) ஆட்டமிழந்தார்

22 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (3.3 ஓவர்) இழந்து டெல்லி தள்ளாடியது. இந்த நெருக்கடியான சூழலில் கப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும் கைகோர்த்து அணியை மோசமான நிலைமையில் இருந்து மீட்டெடுத்தனர். அதே சமயம் ஏதுவான பந்துகளை விரட்டியடிக்கவும் தவறவில்லை. குருணல் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் ரிஷாப் பண்ட் 2 சிக்சர்களை பறக்க விட்டார். இந்த சீசனில் முதல்முறையாக அரைசதம் எட்டிய ரிஷாப் பண்ட் 56 ரன்களில் (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கவுல்டர்-நிலேவின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ்-பண்ட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 96 ஓட்டங்களை பெற்றனர்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டும், நாதன் கவுல்டர்-நிலே 2 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஜஸ்பிரித் பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

பின்னர் 157 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி கொக் களம் புகுந்தனர். இருவரும் டெல்லி பந்து வீச்சை துவம்சம் செய்தனர். ரபடாவின் ஒரே ஓவரில் டி காக் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் தெறிக்க விட்டார். முதல் 4 ஓவர்களில் இவர்கள் 45 ரன்கள் விளாசி ஆட்டத்தை முழுமையாக டெல்லியிடம் இருந்து தட்டிப்பறித்தனர். டி கொக் 20 ரன்களில் (12 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார்.

டெல்லி பந்து வீச்சாளர்களை மிரள வைத்த ரோகித் சர்மாவும் அதிரடி காட்ட அணி வெற்றியை நோக்கி வேகமாக பயணித்தது. பிரவீன் துபேவின் ஓவரில் ரோகித் சர்மா சர்வ சாதாரணமாக சிக்சர்களை கிளப்பினார். இதற்கிடையே ரோகித் சர்மாவுக்காக சூர்யகுமார் யாதவ் (19 ரன்) ஆட்டமிழந்தார் .

வெற்றியை நெருங்கிய சமயத்தில் ரோகித் சர்மா (68 ரன், 51 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) பந்தை தூக்கியடித்து ஆட்டமிழந்தார்

அடுத்து வந்த பொல்லார்ட் (9 ரன்), ஹர்திக் பாண்ட்யா (3 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும் மும்பை அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. இஷான் கிஷன் 33 ரன்களுடனும் (19 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), குருணல் பாண்ட்யா ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பை அணி கோப்பையை 5-வது முறையாக சம்பியனாகியது. ஏற்கனவே 2013, 2015, 2017, 2019-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருக்கிறது. ஐ.பி.எல். வரலாற்றில் வேறு எந்த அணியும் 3 முறைக்கு மேல் கோப்பையை வென்றதில்லை. இந்த வகையில் மும்பை கப்டன் ரோகித் சர்மா ஐ.பி.எல். வரலாற்று புத்தகத்தில் இடம் பிடித்து விட்டார். அதே சமயம் முதல்முறையாக இறுதிசுற்றுக்குள் நுழைந்திருந்த டெல்லி அணியின் கனவு தகர்ந்து போனது.

முதல்முறையாக மும்பை அணி இதற்கு முன்பு கோப்பையை கைப்பற்றிய 4 முறையும் முதலில் துடுப்பாட்டம் செய்தே வெற்றி பெற்றிருந்தது. முதல்முறையாக இந்த சீசனில் 2-வது பேட்டிங்கில் அசத்தியிருக்கிறது.

மும்பை கப்டன் ரோகித் சர்மாவுக்கு இது 200-வது ஐ.பி.எல். ஆட்டமாகும். சென்னை கப்டன் டோனிக்கு (204) அடுத்து இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

4 ஆண்டுக்கு ஒரு முறை வரும் ஒவ்வொரு லீப் வருடத்திலும் (366 நாட்களை கொண்டது) புதிய அணி தான் ஐ.பி.எல். கோப்பையை வெல்கிறது. அந்த வகையில் இந்த லீப் ஆண்டில் டெல்லி அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் என்ற கணிப்பை மும்பை பொய்யாக்கி விட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.