அரசியல் கைதிகள் விவகாரத்தில் புதிய நகர்வு: உயர்நீதிமன்ற நீதிபதி துரைராஜா குழுவின் அறிக்கைக்காகக் காத்திருக்கும் அநுர அரசு.

“நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அவர்களது தண்டனைக் காலத்தைக் குறைப்பது தொடர்பில், விசேட அறிக்கைக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசு வழங்கிய வாக்குறுதியின்படி, அரசியல் கைதிகள் இதுவரை விடுவிக்கப்படாமை ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்ற நீதிபதி
தலைமையில் குழு

இது குறித்து அமைச்சர் மேலும் விளக்குகையில்:-

“அரசியல் கைதிகள் உட்பட நீண்டகாலமாகச் சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜா தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் எவ்வித இன, மத பாகுபாடுகளுமின்றி தமது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சட்ட ரீதியான பொறிமுறை

அரசியல் கைதிகளின் தண்டனைக் காலத்தை நினைத்த மாத்திரத்தில் குறைப்பதற்கோ அல்லது அவர்களை உடனடியாக விடுவிப்பதற்கோ சட்ட ரீதியாகச் சில நடைமுறைகள் உள்ளன. எனவே, குறித்த குழு தனது பரிந்துரைகளையும் அறிக்கையையும் சமர்ப்பித்தவுடன், அதன் அடிப்படையில் தகுதியான கைதிகளை விடுவிக்க அல்லது தண்டனைக் குறைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.” – என்றார்.

நீண்டகாலமாகத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வரும் சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கிய எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.