கோடரித் தாக்குதலுக்குள்ளான மூதாட்டி 16 நாள்களின் பின் பலி! களுத்துறையில் நேர்ந்த கொடூரம் சந்தேகநபரான இளைஞர் கைது.

அண்டை வீட்டு உறவினரான இளைஞர் ஒருவரால் கோடரியால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயதுடைய மூதாட்டி ஒருவர், 16 நாள்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

களுத்துறை தெற்கு, கிதுலாவ, லாகோஸ்வத்த ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த எச். பி. யசவதி (வயது 71) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி இக்கொடூரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் மூதாட்டியின் முகத்திலேயே கோடரியால் கடுமையாகத் தாக்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மூதாட்டி தனது வீட்டின் வரவேற்பறையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை அவரது மருமகள் முதலில் கண்டுள்ளார். குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கோடரியையும் பொலிஸார் அதே இடத்திலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மூதாட்டி களுத்துறை நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 16 நாள்கள் உயிருக்குப் போராடி வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை நடத்தினார் எனக் கருதப்படும் உறவினரான இளைஞர், சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், இந்தத் தாக்குதலுக்கான துல்லியமான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.