போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: நேற்று மாத்திரம் 968 பேர் சிக்கினார்கள்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதைப்பொருள் பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய செயற்திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 968 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு தழுவிய ரீதியில் 1,015 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் 15 பேருக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஒன்பது பேர் மேலதிக புனர்வாழ்வுக்காக அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்புகளின் போது சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 453 கிராம் ஹெரோயின், 656 கிராம் ஐஸ், 903 கிராம் கஞ்சா, 4 ஆயிரத்து 314 கஞ்சா செடிகள், 5 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 28 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 431 போதை மாத்திரைகள், 313 கிராம் மதனமோதகம் மற்றும் 753 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை இலக்கு வைத்து இந்தத் தேசிய திட்டம் தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
