இலங்கையின் மனிதாபிமான உதவிக்கு ஈரான் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிப்பு.
பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆராயும் நோக்கில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் செயித் அப்பாஸ் அரக்ச்சி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடினார்.
நேற்று இடம்பெற்ற இந்த உரையாடலின் போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நகர்வுகளைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான நிலைமைகள் குறித்து ஈரானிய அமைச்சர் விஜித ஹேரத்துக்கு விளக்கமளித்தார்.
குறிப்பாக, கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய போர்க்கப்பலான ‘டெனா’வின் மாலுமிகளுக்கு உதவுவதில் இலங்கை அரசு மேற்கொண்ட மனிதாபிமான முயற்சிகளுக்கு ஈரானிய வெளிவிவகார அமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 84 மாலுமிகளின் சடலங்களை மீட்க இலங்கை வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் அச்சடலங்களை அவர்களின் தாய்நாட்டுக்குக் கௌரவத்துடன் கொண்டு செல்ல உதவியமைக்காக அவர் இலங்கைக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் இதன்போது விரிவாக விவாதித்தனர் என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
