மின்வெட்டு குறித்து இதுவரை உத்தியோகபூர்வ முடிவு இல்லை – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு.

இலங்கையில் மின்வெட்டை அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா அல்லது திட்டமிட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

“மத்திய கிழக்கு போர்ச் சூழல் வருங்காலத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இப்போது துல்லியமாகக் கணிக்க முடியாது. போர் இன்னும் உக்கிரமடைந்தால் கூட, அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கான முன்னேற்பாட்டுத் திட்டங்களையே அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.” – என்று குறிப்பிட்டார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் இன்று மின்வெட்டுத் தொடர்பான அச்சங்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அமைச்சரவைப் பேச்சாளரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நிலவிய குழப்பங்களுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தற்போதைய சூழலில் மின் விநியோகத்தைப் பாதிப்பின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசின் முதன்மை நோக்கம் என்றும் அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.