20 இற்கு ஆதரவளித்தவர்களை ஆளுந்தரப்பில் அமர்த்துங்கள்! சபாநாயகரிடம் எதிர்க்கட்சி வலியுறுத்து.

20 இற்கு ஆதரவளித்தவர்களை
ஆளுந்தரப்பில் அமர்த்துங்கள்!
சபாநாயகரிடம் எதிர்க்கட்சி வலியுறுத்து

அரசு கொண்டுவந்த 20ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேரையும் ஆளும் தரப்புடன் இணைத்து விடுமாறும், எதிர்க்கட்சியில் அவர்களை வைத்திருந்தால் பாரிய பிரச்சினைகள் உருவாகும் எனவும் எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி கொண்டுவந்த விவாதம் முடிந்த பினனர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. மேலும் கூறியதாவது:-

“அரசு கொண்டுவந்த 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேரையும் எதிர்க்கட்சியுடன் அமர வைக்க வேண்டாம் எனக் கடிதம் மூலம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளேன்.

எனவே, நீங்கள் அதனைக் கருத்தில்கொண்டு அவர்கள் 8 பேரையும் ஆளும் தரப்பின் பக்கம் ஆசனங்களை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். எதிர்வரும் 17ஆம் திகதி வரவு – செலவுத் திட்ட விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறும்.

ஆகவே, இவர்கள் 8 பேரையும் ஆளும் கட்சியின் பக்கமோ – ஆளும் கட்சியின் கும்பலிலோ ஆசனங்களை ஒதுக்கிக்கொடுங்கள்” – என்றார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “இந்தக் காரணிகள் குறித்து நான் ஆராய்ந்து முடிவு ஒன்றை வழங்குகின்றேன்” என்றார்

Leave A Reply

Your email address will not be published.