போதைப்பொருள் கடத்தல்: 22 பிக்குகளுக்கும் மறியல்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளையும் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் பதிவான மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிக்குகள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதிவான் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.

கைப்பற்றப்பட்ட 110 கிலோகிராம் எடையுள்ள ‘குஷ்’ மற்றும் ‘ஹசீஸ்’ ரக போதைப்பொருள்களின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் கண்டறியப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, இவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதியை வழங்கியவர்கள் யார்? இந்தப் பாரிய கடத்தல் பின்னணியில் இயங்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு எது? இந்தச் சதித்திட்டத்தில் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? ஆகிய கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இளம் பிக்குகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்தப் பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளமை தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்துப் பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.