மீண்டுமொரு பயங்கரப் பொருளாதார நெருக்கடி: சர்வகட்சி மாநாட்டை உடனடியாகக் கூட்டுக! – ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை.

இலங்கை மீண்டுமொரு பயங்கரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான அவசரகால தேசிய தீர்வுகளை வகுப்பதற்காக உடனடியாகச் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்க்கட்சிகள் கூட்டாக அவசர கோரிக்கை விடுத்துள்ளன.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான விசேட கூட்டத்தின் பின்னரே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

“நமது நாடு மீண்டுமொரு படு பயங்கரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், இன்று (நேற்று) எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுகூடி தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தோம்.

வேகமாகச் சரிந்துவரும் இலங்கை ரூபாயின் மதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அரசின் துண்டுவிழும் செலவீன அழுத்தங்கள் மற்றும் சந்தையில் பெருகிவரும் கடுமையான பொருளாதார நிச்சயமற்ற தன்மை என்பன இனியும் ஏதோவொரு தனிப்பட்ட தரப்பையோ அல்லது ஒரு பகுதியை மட்டுமோ பாதிக்கும் பிரச்சினையாகக் கருத முடியாது. இது ஒட்டுமொத்த தேசத்தையும் பாதிக்கும் பாரிய ஆபத்தாகும்.

எனவே, நாட்டின் இந்த அபாயகரமான பொருளாதார நிலைமை மேலும் மோசமடைந்து, மக்கள் மீண்டும் ஒருமுறை வீதிகளுக்கு இறங்குவதற்கு முன்பாக, இதற்கான அவசரகால தேசிய தீர்வுகளை ஒன்றிணைந்து வகுக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

இதற்காக, துரிதமாக அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாட்டை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முறைப்படி வேண்டுகோள் விடுப்பதற்கு இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நாம் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளோம்.” – என்றார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண அரசு அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, இந்தச் சர்வகட்சி மாநாட்டை விரைவாகக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.