தேசிய மக்கள் சக்தியை யாராலும் எளிதாக அசைத்துவிடவே முடியாது! – கொழும்பில் அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்.

தேசிய மக்கள் சக்தி என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்லாமல், அதுவொரு முறையான ஒழுக்கமும், பலமான கட்டமைப்பும் கொண்ட மக்கள் சக்தி என்பதால் தங்களை யாராலும் எளிதாக அசைத்துவிட முடியாது என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எச்.எம். சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“எங்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் அதிகாரம் என்பது ஊழியர்கள் மற்றும் ஒட்டுமொத்த பொதுமக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுமே தவிர, எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படாது.

எங்களுக்கு எதிராக அரசியல் செய்யும் மாற்றுக் கட்சியின் தலைவர்கள் கூட ஊழியர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களிடம் எந்தவித அரசியல் பழிவாங்கல்களோ அல்லது அநீதிகளோ காட்டப்பட மாட்டாது. ஜனாதிபதி அவர்கள் பதவிப்பிரமாணம் செய்தபோது குறிப்பிட்டதைப் போல, அதிகாரத்தை எந்த எல்லைக்குள் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு எங்களுக்கு உள்ளது. இந்த அதிகாரம் எங்களது குடும்பத்தினரின், உறவினர்களின் அல்லது தனிப்பட்டவர்களின் நலன்களுக்காக ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது.” – என்று உறுதியளித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பலம் குறித்துப் பேசிய அமைச்சர்,

“எங்களுக்குப் பின்னால் மிகச் சிறந்த தொழிற்சங்கக் கட்டமைப்பும், மாணவர் இயக்கங்களும் தளம் அமைத்துக் கொடுத்துள்ளன. அத்துடன் நாட்டின் பொருளாதாரத் தூண்களாக விளங்கும் விவசாயிகளின் அமைப்புகளும், பெண்களின் பேராற்றல் மிக்க மகளிர் முன்னணியும் எங்களோடு பயணிக்கின்றன. நாடெங்கிலும் பரந்து விரிந்து கிடக்கும் இலட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட வலுவானதொரு வலையமைப்பு தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது.” – என்று குறிப்பிட்டார்.

அரசியல் களத்தில் தங்கள் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் குறித்துப் பதிலளித்த அவர்,

“எங்கள் தரப்பில் உள்ள தனி நபர்களை இலக்கு வைத்துத் தாக்கினாலும் அல்லது நாங்கள் பேசும் வார்த்தைகளைத் தவறாகக் கோடிட்டுக் காட்டி விமர்சித்தாலும் எங்களை வீழ்த்திவிட முடியாது. நாங்கள் விமர்சனங்களைத் தாங்கி, அவற்றுக்கு முகம்கொடுத்துப் பழகியவர்கள்.

எனவே, அவதூறுகளையோ, விமர்சனங்களையோ முன்வைத்து எங்களைப் பின்வாங்கச் செய்யலாம் என யாரும் எளிதாக எண்ணிவிட வேண்டாம். எங்களது அரசியல் என்பது எங்களின் சொந்த நலனுக்காக அன்றி, நாட்டின் எதிர்காலத்துக்காகவும், நாட்டின் பிள்ளைகளின் நலனுக்காகவும் மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டது.” – என்று தெரிவித்துத் தனது உரையை நிறைவு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.