ரயிலுடன் ஓட்டோ மோதி கோர விபத்து! இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!! – கந்தானையில் துயரம்

கம்பஹா மாவட்டம், கந்தானை ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ஓட்டோ ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோவின் சாரதி மற்றும் அதில் பயணித்த பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோர ரயில் விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை வேளையில் அரங்கேறியுள்ளது.

கந்தானை புனித மரியா ரயில் கடவையில், ரயில் ஒன்று வந்துகொண்டிருப்பதைக் குறிக்கும் வகையில் கடவையின் சிவப்பு நிற அபாய எச்சரிக்கை விளக்குகள் எரிந்து, ஒலிச் சிக்னல்களும் செயற்படுத்தப்பட்டிருந்தன. எனினும், அந்த எச்சரிக்கைகளையும் மீறி ஓட்டோவின் சாரதி ரயில் கடவையை அவசரமாக ஊடறுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது, சிலாபத்திலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த ரயிலுடன் ஓட்டோ எதிர்பாராத விதமாக மிகக் கொடூரமாக மோதி விபத்துக்குள்ளானது.

ரயில் மோதிய வேகத்தில் ஓட்டோ கடுமையாகச் சேதமடைந்ததுடன், தூக்கி வீசப்பட்டது.

இந்த விபத்தில் ஓட்டோவில் பயணித்த ஏக்கலை, ஜோஷிட்டா வத்தையைச் சேர்ந்த எம். ரீட்டா என்ற பெண் மற்றும் ஓட்டோவின் சாரதி ஆகிய இருவரும் உடல் நசுங்கி விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து காரணமாகப் புத்தளம் – கொழும்பு ரயில் பாதையின் போக்குவரத்துச் சேவைகள் சில நிமிடங்கள் தாமதமடைந்தன. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுப் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோர விபத்து தொடர்பாகக் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.