மாற்றுச் சட்டமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனே நீக்கப்பட வேண்டும்! – தமிழரசின் எம்.பி. சிறீதரன் வலியுறுத்து.

இலங்கையில் தற்போதும் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டமானது எவ்வித மாற்றுச் சட்டங்களுமின்றி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – கண்டாவளை பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த பிரபல சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷன், பின்னர் சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நியாயமான விடுதலைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சங்கீத்ஷன் கைது செய்யப்பட்ட பின்னர் நான் அவரைச் சிறைக்குச் சென்று நேரில் சந்தித்ததுடன், ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தேன். அத்துடன், நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்து இந்த விடயம் குறித்துப் பேசியிருந்ததோடு, கடந்த புதன்கிழமை ஜனாதிபதியுடன் நேரடியாகத் தொலைபேசியிலும் கலந்துரையாடினேன். அதன்போது, சாதாரண பிணையின் கீழ் அவரை விடுவிக்க முடியும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

மேலும், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டோரிடமும் இது குறித்துப் பேசினேன். மக்களின் நியாயமான குரலுக்கும், சட்டத்தரணிகளின் தீவிர முயற்சிகளுக்கும் செவிசாய்த்து தற்போதைய அரசு இந்த விடுதலையைச் சாத்தியமாக்கியுள்ளது.

கடந்த காலங்களில் 60 ஆயிரம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உறுப்பினர்கள் தெற்கில் படுகொலை செய்யப்பட்டமைக்கும், வடக்கு – கிழக்கில் தமிழர்கள் உள்ளிட்ட பல இலட்சம் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்டமைக்கும் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டமே பிரதான காரணமாகும். எனவே, மனித உரிமைகளைப் பறிக்கும் இந்தச் சட்டம் மாற்று வடிவங்களின்றி ஒட்டுமொத்தமாக நீக்கப்பட வேண்டும்.

அதேநேரம், எந்தவொரு இனத்தையோ அல்லது மதத்தையோ இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வன்முறைச் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உண்மைகள் முழுமையாக வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும், அவர்கள் தராதரமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.