உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்தை தொற்று நோய் சீர்குலைத்துள்ளது

உலகளாவிய வர்த்தகம், சுற்றுலா, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை ஸ்தம்பிதமடைந்துள்ளன. தொற்றுநோய் நிலைமையானது நிலையான வர்த்தகங்கள் மற்றும் பொருளாதாரங்களை திடீரென சீர்குலைத்து, நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கனடா, ஜமைக்கா மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆகியோரால் 28 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட கொவிட் -19 மற்றும் அதற்கு பின்னரான காலங்களில் அபிவிருத்திக்கான நிதியுதவி குறித்த உயர்மட்ட நிகழ்வில் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வுரையில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,…

இந்த கூட்டத்தை ஒன்றுகூட்டிய கனடா மற்றும் ஜமைக்காவின் பிரதமர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலாவதாக, இந்த அழிவுகரமான வைரஸால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், தன்னலமின்றி முன்னணியில் நின்று பணியாற்றுவோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையான பொருளாதாரம் மேலும் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை என்பதால் அரசிறை வருமான பற்றாக்குறையை முறையாகக் குறைத்து வரும் நாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளன. வீழ்ச்சியடைந்து வரும் போக்கில் இருந்த கடன் தலைகீழ் மாற்றத்தைக் கண்டுள்ளது.

செயற்படாத சொத்துக்கள் உயர்ந்து திரவத்தன்மை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் வங்கித்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. முழு சேமிப்பு – முதலீட்டு சமன்பாடு சரிவடைந்துள்ள காரணத்தினால் அபிவிருத்திக்கு நிதியளித்தல் என்பது உலகப் பொருளாதாரத்திற்கு பொருத்தமான தலைப்பாக உள்ளது.

தொழிலாளர் வருமானம், ஏற்றுமதி சார்ந்த வருமானம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சேவைகள் மூலம் இலங்கையின் பிரதான பரிமாற்ற வழிகள் எமது உண்மையான பொருளாதாரத்தை பாதித்துள்ளன. வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இழப்பு பாரியது.

நாம் மிகவும் மதிக்கும் ஒரே சொத்து மனித அபிவிருத்தி என்பதால் எத்தகைய சிரமங்களை நாம் எதிர்கொண்டாலும் ‘மக்களே முதன்மையானவர்கள்’ என்ற எமது கொள்கையில் சமரசம் செய்ய முடியாது.

இது அரசாங்க மற்றும் வர்த்தகத் துறைகளின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு நெருக்கடி என்பதால், நிபந்தனையற்ற வரவு செலவுத் திட்ட உதவி மற்றும் உத்தியோகபூர்வ கடனுக்கான ஈடு செய்யக்கூடிய கடன் ஒத்திவைப்பு வசதிகள் மூலம் சர்வதேச ஆதரவு பல்தரப்பு மற்றும் இருதரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்து கிடைக்க வேண்டும், இதனால் தனியார் கடன் மற்றும் பங்குச் சந்தைகள் நம்பிக்கையை இழக்காது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான பல்தரப்பு மற்றும் இருதரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் தங்கள் பொருளாதாரங்களை புதுப்பிக்க அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இதுபோன்ற இடத்தை உருவாக்குவதில் புத்தாக்கத்துடன் இருக்க வேண்டிய ஒரு விசேட பொறுப்பு உள்ளதுடன், கடன் வழங்குவதற்கான சாதாரண நிபந்தனைகளை வலியுறுத்தக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, பெரும்பாலான நாடுகள் தங்கள் கடன் கடப்பாடுகளுக்கு மதிப்பளித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களால் ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்குவதன் மூலம் புதிய இடத்தை வழங்குவதற்கான நேரம் வந்துள்ளது.

எமது முன்னுரிமையான விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் நிர்வாகம், கிராமிய பொருளாதாரம் மற்றும் வறுமைக் குறைப்பு, மக்களுக்கும் வர்த்தக சமூகத்திற்குமான சந்தை வாய்ப்புகளை அபிவிருத்தி செய்தல், கிராமங்களுடனான மேம்பட்ட இணைப்பு மற்றும் எமது சூழல் பாதுகாப்பு உத்திகளுக்கு ஏற்ப பசுமை நகரங்களை உருவாக்குதல் என்பன சுமார் 2 மாதங்கள் பொருளாதார செயற்பாடுகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் பின்னடைவை சந்தித்துள்ளன.

கொவிட்-19 சுகாதார அபாயத்தினால் சமூகம் பாதிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்த சுகாதார தனிமைப்படுத்தல் நியமங்களை பேணும் அதே வேளையில் இந்த வாரத்தில் இருந்து கட்டுப்பாடுகளை தளர்த்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். எவ்வாறாயினும், உண்மையான பொருளாதாரத்தில் ஏற்பட்ட இரண்டு மாத இழப்பு மற்றும் இயல்புநிலையை அடைவதற்கான கால அவகாசம் நீண்டதாக இருக்கும் என்பதால், அத்தகைய வசதிகளின் அனைத்து அம்சங்களாலும் வெளிப்புற நிதியளிப்பு ‘அபிவிருத்தி மையமானதாக’ இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பாரிய இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ கடன் மற்றும் நடுத்தர கால அவசர வரவுசெலவுத்திட்ட உதவி கடன்களின் விவரக்குறிப்பு தனியார் கடன் கடப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கும் வர்த்தக மற்றும் கொடுப்பனவு முறைகளை தளர்த்துவதற்கும் பெரும் பொருளாதார இடத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வளர்ச்சியையும் முதலீடுகளையும் மீள் ஊக்குவிக்க தனியார் துறை கடன் வழங்குநர்களிடையே நம்பிக்கையையும் மீட்டெடுக்கும். சீன மக்கள் குடியரசின் தலைவர் மேன்மைதங்கிய ஷி ஜின்பிங், இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர சிங் மோடி மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. ரொபர்ட் ஓ பிரையன் ஆகியோருடன் உரையாடும் போது அபிவிருத்தி நிதியுதவியின் அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இருப்பினும், வருந்தத்தக்க வகையில், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பரவலான வகைப்பாட்டின் கீழ் நடுத்தர வருமான நாடுகள் அடங்கியுள்ளன, இதன் மூலம் அவற்றின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.

பாரிய இருதரப்பு, பல்தரப்பு முகவர்கள் தங்களுக்குள் நிபந்தனைகளை வைக்காமல், அந்தந்த அபிவிருத்தியடைந்துவரும் மற்றும் நடுத்தர வருமான பொருளாதாரங்களில் அபிவிருத்தி பங்காளிகளாக முன்வருவது மூலமான விரைவான நடவடிக்கைகள் உலகின் முன்னணி முகவர்கள் மற்றும் தலைவர்களின் பொறுப்பாகும்.

Comments are closed.