முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு ரணில் உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் அஞ்சலி!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானதையடுத்து, அவரின் பூதவுடலுக்கு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கொழும்பு 08, பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடலுக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் இன்று நேரடியாக வருகை தந்து தமது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

மலர்ச்சாலைக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சி.டி. விக்கிரமரத்னவின் பூதவுடலுக்கு மலரஞ்சலி செலுத்தியமையுடன், அன்னாரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில், நாட்டின் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், பொலிஸ்மா அதிபராக இருந்த சி.டி. விக்கிரமரத்னவுக்குப் பலமுறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேபோல், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மலர்ச்சாலைக்கு வருகை தந்து, நாட்டின் பாதுகாப்புத் துறையில் சி.டி. விக்கிரமரத்ன ஆற்றிய காத்திரமான சேவைகளை நினைவு கூர்ந்து இறுதி மரியாதை செலுத்தினார்.

கடந்த 2020ஆம் ஆண்டு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சி.டி. விக்ரமரத்ன, நாட்டின் நெருக்கடியான சூழல்களின் போது திறம்படச் செயற்பட்ட அதிகாரியாகப் போற்றப்படுகின்றார். அன்னாரின் இறுதிச் சடங்குகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பங்கேற்புடன், உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதைகளுடன் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளன.

இவரது மறைவையொட்டி நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்தும் மலர்ச்சாலைக்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.