எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு அரசியல் கூட்டணியல்ல தேர்தலில் ‘மொட்டு’ தனித்தே போட்டியிடும் – சாகர காரியவசம் அறிவிப்பு.

எதிர்காலத்தில் தேசிய தேர்தல் ஒன்று இடம்பெறும் போது, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது வேறு எந்தத் தேசியக் கட்சியுடனோ எந்தவிதக் கூட்டணியும் அமைக்கப் போவதில்லை எனவும், தனித்தே போட்டியிடுவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசில் பொலிஸ் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு என்பன அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைப் பேச்சாளர்கள் இந்த அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தை அரசியல் மயப்படுத்தவும் அரசு முயற்சிக்கின்றது.

சுயாதீன அரச நிறுவனங்களைக் கைப்பற்றி, அதன் ஊடாக அரச நிர்வாகக் கட்டமைப்பைத் தமக்கு ஏற்றவாறு செயற்படுத்த முனைவது முறையற்றது. ‘அரசைக் கைப்பற்றிவிட்டோம், ஆனால் அரச அதிகாரத்தை இன்னும் முழுமையாகக் கைப்பற்றவில்லை’ என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது இதன் வெளிப்பாடாகும்.

பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களின் சேவைக்காலத்தை நீடித்து, அவர்களைத் தன்பக்கம் ஈர்த்து நீதித்துறையின் பிரதான கட்டமைப்புக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அரசு முயற்சிக்கின்றது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது நீதித்துறையைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முயற்சிக்கவில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டோம்.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதற்கமைவாகவே தற்போது சகல எதிர்க்கட்சிகளுடனும் ஒன்றிணைந்துள்ளோம். இதுவொரு அரசியல் கூட்டணியல்ல. ஏனெனில், ஒவ்வொரு கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை வளர்ச்சி பெற்றுள்ளது என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஆனால், எவ்வாறான கருதுகோளுக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இவ்வாறான அறிக்கைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது.
அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை அறிவதற்கு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் அறிக்கை வெளியிடத் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தினால், மக்கள் தமது சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்துவார்கள். அப்போது ஜனாதிபதி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் உண்மையான தரத்தை விளங்கிக் கொள்ளலாம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.