கிழக்கு பல்கலைக்கழக மாணவி விடுதியில் உயிரிழப்பு: அதிர்ச்சியில் இரு தோழிகள் மருத்துவமனையில் அனுமதி.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் கல்லடி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் இருவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் ஆர்.டி.ஏ வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய கே. யாழினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த கல்லூரியில் நாடகத்துறை கற்கைநெறிக்காகத் தெரிவு செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்வி கற்குவதற்காக விடுதியில் தங்கியிருந்த வேளையே இந்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் 12 மணியளவில் விடுதி அறையில் மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக சக மாணவர்கள் மூன்று பேரையும் மீட்டு மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். எனினும், மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மயங்கி விழுந்த மாணவிகள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 31 வரையிலான 7 மாத காலப்பகுதியில் 84 பேர் உயிரிழந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2025 ஆம் ஆண்டு முழு ஆண்டில் மட்டும் மாவட்டத்தில் 164 பேர் இவ்வாறான அசம்பாவிதங்களால் உயிரிழந்துள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமை அலுவலகப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.