22ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தோற்கடிக்க மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்! – மக்கள் போராட்ட முன்னணி அழைப்பு.

அரசின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது தனிநபர்களினதும் ஒரு குறிப்பிட்ட குழுவினதும் நலன்களுக்காகவே கொண்டுவரப்படுகின்றதே தவிர, இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வித நன்மையும் பயக்காது என்று மக்கள் போராட்ட முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு விழாக்கள் நடத்தப்படும் அதேநேரம், தற்போதைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்காகவே இந்த 22ஆவது அரசமைப்புத் திருத்தம் தன்னிச்சையாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் பங்கேற்பு ஜனநாயகம் பற்றிப் பேசும் அரசு, இந்தச் சட்டமூலம் குறித்து எவ்வித பகிரங்க உரையாடலையும் நடத்தவில்லை.

இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 50 இற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசுக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய ஜானக அதிகாரி, லக்ஷ்மன் நிபுணாரச்சி போன்ற தமக்கு நெருக்கமானவர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொதுமக்களின் சார்பில் ஆதரவாக மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, எதிர்ப்பைத் தெரிவித்து அரசியல் கட்சிகள், வெகுஜன இயக்கங்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் முன்வந்தனர்.

இந்தத் சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டு செல்ல அரசு பயப்படுகின்றது. மக்கள் தீர்ப்புக்குச் சென்றால் நிச்சயமாகத் தோல்வியடைவோம் என்பதை அது உணர்ந்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்திலுள்ள 159 பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு இதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். மேலிடத்தில் இருப்பவர்கள் கூறுவதை மட்டுமே செய்யும் பெரும்பாலான உறுப்பினர்கள், அடிப்படைச் சட்ட அறிவு கூட இல்லாமல் இதனை நிறைவேற்றுவார்கள்.” – என்றார்.

“இது மக்கள் ஜனநாயகமல்ல, மாறாக அரசின் தன்னிச்சையான ஜனநாயக விரோதப் போக்காகும். சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகிய அனைத்துக்கும் மேலாக மக்களே முதன்மையானவர்கள் என்பதால், தனிநபர்களின் நலனுக்காகக் கொண்டுவரப்படும் இந்த ஜனநாயக விரோத 22ஆவது அரசமைப்புச் சட்டமூலத்தைத் தோற்கடிக்க மக்கள் வீதியிலிறங்கிப் போராட வேண்டும்.” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.