இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து தலைமன்னார் மணல் தீடைகளில் தவித்த 11 ஈழ அகதிகள் கடற்படையினரால் மீட்பு!
இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட 11 ஈழ அகதிகள், படகோட்டிகளால் மணல் தீடைகளில் இறக்கிவிடப்பட்ட நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், மணல் தீடைகளில் சிலர் நிற்பதை அவதானித்து மேலதிக படகுகளின் உதவியுடன் அங்கு சென்றுள்ளனர். முதற்கட்டமாக ஒரு ஆண், 4 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் என 8 பேரை மீட்டுத் தலைமன்னார் அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து, மற்றொரு தீடையில் மேலும் சிலர் நிற்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படையினர் விரைந்து சென்று ஒரு ஆண் மற்றும் 2 சிறுவர்கள் என மூவரையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு இரு கட்டங்களாக மீட்கப்பட்ட 11 பேரும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களிடம் கடற்படையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, இவர்கள் இந்தியாவின் அனையூர் மற்றும் ஓசூர் அகதி முகாம்களில் இருந்து இராமேஸ்வரம் ஊடாகப் புறப்பட்டு வந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட 11 பேரும் மேலதிக நடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.







