சர்வாதிகாரப் பாதையில் பயணித்து ஜனநாயகத்தை மரணப் படுக்கைக்குக் கொண்டு செல்கின்றது அரசு! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் குற்றச்சாட்டு.
https://youtu.be/VH3tN-rCjN8?si=NdgREtIn0A6JQY7u https://youtu.be/VH3tN-rCjN8?si=NdgREtIn0A6J
திசைகாட்டி அரசு மக்களின் உரிமைகளை மீறி, ஜனநாயகத்தைச் சீரழித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை தேர்தல் தொகுதி, லுனுகம்வெஹர புதிய நகரில் விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
“மாறுபட்ட அரசே இன்று நாட்டை ஆட்சி செய்து வருகின்றது. சர்வாதிகார, எதேச்சதிகார அரசாகவே இந்த அரசு காணப்படுகின்றது. அவ்வாறே ஜனநாயகத்தை மரணப் படுக்கைக்குக் கொண்டு செல்லும் அரசாகவும் இது திகழ்கின்றது. தற்சமயம் இந்தப் பிரஜைகளின் பங்களிப்பைக் குறைக்கும் தேசியத் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து, ஜனநாயகத்துக்கான வெளியைச் சுருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன் ஆரம்பம் இளைஞர் மன்றத் தேர்தல் ஊடாக நடந்து, பின்னர் சிவில் பாதுகாப்பு குழுக்கள் வரை சென்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது 22 ஆவது அரசமைப்புத் திருத்தம் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, ஜனநாயகப் பாரம்பரியங்கள் அனைத்தையும் நாசமாக்கி, தனிவழியில் எல்லா விடயங்களையும் செய்துகொள்ள இந்த அரசு முற்பட்டு வருகின்றது.
சர்வாதிகாரப் போக்கில், தனிவழியில் செயற்படும் இந்த அரசு எடுக்கும் தீர்மானங்கள் காரணமாகவே நாடே வீழ்ச்சியடைந்துள்ளது. தனிக்கட்சி நாட்டை ஆட்சி செய்வதே ஜனாதிபதிக்கு தற்போதுள்ள ஒரே நோக்கமாகக் காணப்படுகின்றது. முழு அரசும் அரச இயந்திரமும் ஒரு கட்சியினது உத்தரவுகளுக்கு இணங்கச் செயற்பட இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காகவே 22 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளனர்.
எதிர்க்கட்சியாக இருந்தவேளை மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பதாகவும், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில் எரிபொருளைப் பெற்றுத் தருவதாகவும், இளைஞர் தலைமுறைக்கு 12 இலட்சத்துக்கு விட்ஸ் ரக காரைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தித் தருவதாகவும், நெல் ஒரு கிலோவுக்கு 150 ரூபா நிலையான விலையைச் சட்ட ரீதியாக ஆக்கித் தருவதாகவும் பிரஸ்தாபித்தனர். ஆனால், இன்று வரை இதில் எதையுமே செய்யவில்லை. நாட்டை சர்வாதிகார ஆட்சி நோக்கியே அரசு நகர்த்திச் செல்கின்றது.
எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளைச் சொற்ப தொகையில் குறைத்துவிட்டு ஊடகக் காண்பிப்புகளையே இவர்கள் செய்து வருகின்றனர். தமக்கு வாக்களித்த மக்கள் துன்பப்பட வேண்டும் என்பதே இந்த மாறுபட்ட அரசின் ஆசையாகக் காணப்படுகின்றது.
விவசாயியின் மகன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று சுழற்சி முறை விவசாயத்தைக்கூட தடை செய்து வருகின்றார். இதன் மூலம் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெற்செய்கை, தோட்டப் பயிர்கள், மரக்கறி மற்றும் பழங்கள், ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை உள்ளிட்ட ஒட்டுமொத்த விவசாயமும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஆகியவை இவர்களிடம் இருப்பதால் அரசு தங்களை அதிகாரம் படைத்தோராக நினைத்துக்கொண்டிருக்கின்றது.
69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்கள் வீதியில் இறங்கியமையாலேயே அவர் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. 2019 இலும் 2024 இலும் மக்கள் ஏமாந்தனர். ஆகவே, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வீதியில் இறங்கத் தயாராகுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.” – என்றார்.
