சவூதி அரேபியாவில் அனோஜனின் மரணதண்டனைத் தீர்ப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்!

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சு உடனடியாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அனோஜனின் விடுதலைக்காகத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவை சார்பில் சவூதி அரேபிய தூதரக உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திப்பதற்கு நேரம் கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத நிந்தனைக் குற்றச்சாட்டில் சவூதி அரேபிய நீதிமன்றத்தால் முன்னர் 5 வருடச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டை அடுத்து அனோஜனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, அனோஜனின் விடுதலைக்காக இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவரைச் சந்தித்து, அந்நாட்டுப் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவுத்திடம் கோரிக்கை வைப்பதற்கான முயற்சிகளைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முன்னெடுத்திருந்தது. இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், இலங்கையிலுள்ள சவூதி தூதரகத்தில் தூதுவர் இல்லாத போதிலும், அதிகாரத்திலுள்ள உயர்மட்டப் பிரதிநிதியை உடனடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் கோரவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அனோஜனின் குடும்பத்தினர் ஊடாகவே தற்போதைய மரணதண்டனைச் செய்திகள் வெளிவந்துள்ளதால், வெளிவிவகார அமைச்சு இந்தத் தீர்ப்பு குறித்து உடனடியாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய சுமந்திரன் மேலும் குறிப்பிடுகையில்,

“அனோஜன் தனது சமூக ஊடகப் பதிவைச் சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டு, காணொளி ஊடாகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். இந்தச் செய்திகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

வேதனையை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருத்து, ஒரு மனிதன் மனம் திருந்தி தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இல்லாமலாக்கிவிடக்கூடாது.

‘அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன்’ என்ற அல்லாஹ்வின் கருணை மீது ஆழமான நம்பிக்கை கொண்டுள்ள நாம், மனிதர்களின் பலவீனங்களை அணுகும்போது இப்பண்புகளையே பின்பற்ற வேண்டும். ஒருவரது உண்மையான மனமாற்றம் குறித்த இறுதித் தீர்ப்பு எல்லாம் வல்ல இறைவனுடையதாகும்.

கருணை காண்பித்து அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதுடன், அவசியமான சட்ட உதவிகளையும் உடனடி இராஜதந்திர தலையீடுகளையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.

நீதியில் கருணைக்கும் இடமிருக்க வேண்டும். அனோஜன் தனது குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று வாழ்க்கையை மீளக் கட்டியமைக்கத் தகுதியானவர்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.