திருவண்ணாமலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் சிகர விழாவான மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றி வைக்கப்படுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மகா தீபம் ஏற்றுவதற்காக 6 அடி உயரமுள்ள பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதிக்கப்பட்ட தீப கொப்பறை பூஜை செய்யப்பட்டு பக்தர்களால் நேற்று தூக்கிச் செல்லப்பட்டது.

3500 கிலோ ஆவின் நெய்யும், திரியாக பயன்படுத்த ஆயிரம் மீட்டர் நீள காட்டன் துணியும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மலை உச்சிக்கு இன்று அவற்றை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இன்று வெளியூர் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளியூர் பக்தர்கள் வருகையை தடுக்க 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து, போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மேலும் கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.